×

புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி!: லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் மோதிரம், மாலை மாற்றி நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த தீவிர விஜய் ரசிகர்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் இளைஞர் ஒருவர் தமது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை நகர பகுதியில் உள்ள 3 திரையரங்குகளில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாகியுள்ளது. மேலராஜ வீதியில் உள்ள விஜய் திரையரங்கில் லியோ திரைப்படத்தை காண அதிகாலை முதலே பெண்கள், இளைஞர்கள் என குடும்பம், குடும்பமாக ரசிகர்கள் திரண்டனர். திரையரங்கு வாயிலில் பட்டாசு வெடித்தும், பேண்ட் வாத்தியங்கள் முழங்க ரசிகர்கள் குத்தாட்டம் போட்டனர்.

இதனிடையே புதுக்கோட்டை கீழ 3ம் வீதியை சேர்ந்த தீவிர விஜய் ரசிகரான வெங்கடேஷ், அதே பகுதியை சேர்ந்த தமது நீண்ட நாள் காதலியான மஞ்சுளாவை லியோ திரைப்படம் வெளியான விஜய் திரையரங்கில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அவரது விருப்பத்தினை நிறைவேற்றும் விதமாக இருவரது குடும்பத்த்தினரும் திரையரங்கிற்கு சென்று மாலை மற்றும் மோதிரம் மாற்றி இருவரது திருமணத்தையும் உறுதி செய்தனர்.

மணப்பெண் கிறிஸ்தவர் என்பதால் மோதிரம் மாற்றி இன்று திருமணம் நடைபெற்றதாகவும், நாளைய தினம் இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் விஜய் ரசிகரான வெங்கடேஷ் கூறியுள்ளார். விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் அவரது ரசிகர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி!: லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் மோதிரம், மாலை மாற்றி நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த தீவிர விஜய் ரசிகர்..!! appeared first on Dinakaran.

Tags : Vijay ,Pudukottai ,
× RELATED விஜய் மகன் இயக்கத்தில் துல்கர் சல்மான்