×

முப்பெரும் தேவியரின் திருவிழா நவராத்திரி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நவராத்திரி என்றால் ஒன்பது இரவு பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்ற அர்த்தம் உண்டு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழா தான் நவராத்திரி திருவிழா.அம்பாள் மகிசாசூரனை வதம் செய்வதற்காக இந்த ஒன்பது நாட்கள் தவம் நோற்ற காலம் தான் இந்த நவராத்திரி. முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா தான் இந்த நவராத்திரி.

நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும். அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும். வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.

நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது. புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். . நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவுகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.

கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம். நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

தொகுப்பு: குடந்தை நடேசன்

The post முப்பெரும் தேவியரின் திருவிழா நவராத்திரி appeared first on Dinakaran.

Tags : Navratri ,Nava ,Navaratri ,
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை