×

தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

தூத்துக்குடி, அக். 19: நாசரேத்தில் இன்று (19ம் தேதி) தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெறும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி கல்லூரி அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் நமது மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் 3வது கட்டமாக தமிழ் கனவு என்னும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி ஏரல் தாலுகா நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. நிகழ்ச்சியில் சொற்பொழிவாளர் செந்தில்வேல், ஒற்றுமை ஓங்குக என்னும் தலைப்பில் பேசுகிறார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில், அவர்களுக்கு பெருமிதச்செல்வன் மற்றும் பெருமிதச்செல்வி ஆகிய இரு வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன. சொற்பொழிவுக்கு பிறகு கேள்வி எழுப்பும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேள்வி நாயகன் மற்றும் கேள்வி நாயகி ஆகிய இரு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது திறனையும், சிந்தனையையும் வெளிப்படுத்துவதோடு கேள்விகளையும் எழுப்பி விருதுகளை பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Nazareth ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலர் தற்கொலை முயற்சி