×

லியோ படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜூன், திரிஷா நடித்திருக்கும் படம் லியோ. இந்த படத்தை சட்டவிரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென்று அரசு மற்றும் தனியாரின் இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவன இயக்குனர் லலித்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, லியோ திரைபடம் நாடு முழுவதும் 1,500 திரையரங்குகளுக்கு மேல் வெளியாக உள்ளது.

மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் பெரும் நஷ்டம் ஏற்படும். திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று வாதிட்டார். இதையடுத்து, லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இணையதள சேவை நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டார்.

The post லியோ படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Chennai High Court ,Lokesh Kanagaraj ,
× RELATED பள்ளிகளில் உட்கட்டமைப்பு பணிகளுக்காக...