×

ம.பியை தக்கவைக்குமா பா.ஜனதா?: கமல்நாத் தலைமையில் மல்லுகட்டும் காங்கிரஸ்

இந்தியாவின் மத்தியப்பகுதியில் இருப்பதால் மத்தியபிரதேசம் என்று அழைக்கப்படும் மபி, இந்தி பேசும் முக்கிய மாநிலம். பாஜவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் முக்கியம். மிகப்பெரிய மாநிலமாக இருந்த மபியை 2000ம் ஆண்டு பிரித்து சட்டீஸ்கர் என்ற புதிய மாநிலத்தை உருவாக்கி விட்டனர். தற்போது மபியின் எல்லை மாநிலங்களாக மேற்குப்பகுதியில் குஜராத், வடமேற்கில் ராஜஸ்தான், வடகிழக்குப்பகுதியில் உபி, கிழக்குப்பகுதியில் சட்டீஸ்கர், தெற்குப்பகுதியில் மகாராஷ்டிரா ஆகியவை உள்ளன. விந்திய மலைத்தொடர், சத்புரா மலைத்தொடர்கள் இங்கு தான் வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கின்றன. அசோகர் நிறுவிய சாஞ்சி பெரும் தூண் இங்குதான் உள்ளது. கஜூராகோ சிற்பங்கள், பளிங்கு கல் பாறைகள், குண்டல்பூர் சமணக்கோயில்கள், உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயில், ஓங்காரேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஓர்ச்சா குனோ வனவிலங்கு சரணாலயம், கன்ஹா தேசிய பூங்கா ஆகியவையும் இங்கு உள்ளன. அமர்கந்தக்கில் உள்ள பிரம்மன் சிலை மிகவும் முக்கியமானது. குவாலியர் கோட்டை பிரசித்தி பெற்றது. இந்தியாவிலேயே 2வது மிகப்பெரிய பரப்பளவு கொண்ட மாநிலம், 5வது மக்கள் தொகை கொண்ட மாநிலம் மபி. பொருளாதாரத்தில் மபிக்கு 10வது இடம். தனி நபர் ஆண்டு வருமானம் இங்கு மிகவும் குறைவு. அதனால் 26வது இடம். அதே சமயம் வைரம், தாமிரம் அதிகம் கிடைக்கும் மாநிலம். 25.14 சதவீதம் காடுகள் நிறைந்த பகுதி.

இத்தனை சிறப்புகள் பெற்ற மபியில் 2003 டிசம்பர் 8 முதல் தொடர்ந்து 20 ஆண்டுகள் பா.ஜ ஆட்சி நடக்கிறது. இடையே 1 வருடம் 97 நாட்கள் காங்கிரஸ் ஆட்சி. 2018 சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 230 இடங்களில் 114 இடங்களை பிடித்த காங்கிரஸ் சார்பில் கமல்நாத் முதல்வரானார். ஆனால் மன்னர் பரம்பரையை சேர்ந்தவரும், ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பருமான ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு அந்த பதவி மீது கண். ராகுல், பிரியங்காவின் ஆதரவு சிந்தியாவுக்கு இருந்தாலும் சோனியாவின் ஆசி கமல்நாத்திற்கு கிடைத்தது. இதனால் அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பதவி விலகியதால் மபியை கூடுதலாக 4 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கு பா.ஜ முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு வாய்ப்பு கிடைத்தது. மொத்தம் 17 ஆண்டுகள் அவர் மபியை ஆட்சி செய்யும் பாக்கியம் பெற்றுள்ளார். அதோடு காங்கிரஸ் முதல்வர் திக்விஜய்சிங்கிற்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்று முதல்வர் ஆனவர் என்ற பெயரும் அவருக்குத்தான்.

இத்தனை பாரம்பரியம், பெருமை, பெயர், புகழ் எல்லாம் இருந்தும் இந்த முறை சிவ்ராஜ்சிங் சவுகான் திக்குமுக்காட வேண்டியது உள்ளது. தேர்தலில் மட்டுமல்ல, சொந்த கட்சியிலேயே அவருக்கு சீட் இல்லை என்று பரவிய பேச்சு அவருக்கு பெரிய மன உளைச்சலாக அமைந்தது. கடைசியாக 4வது பட்டியலில் பெயர் இடம் பெற்றாலும், இந்த முறை பா.,ஜ தேர்தலில் வென்றாலும் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு பா.ஜ முதல்வர் பதவியை வழங்காது என்று எழுந்து இருக்கும் பிரசாரம் உள்கட்சியிலேயே பெரியதாக வெடித்து இருக்கிறது. வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள காங்கிரசும் தயார். கடந்த 2018ம் ஆண்டு நடந்த துரோகத்திற்கு பழிதீர்க்க காங்கிரசில் கமல்நாத் தலைமையில் பெரும்படை களம் இறங்கியுள்ளது. அதனால்தான் வரலாற்றிலேயே முதன்முறையாக பா.ஜ தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தற்போது வரை 136 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரசும் பதிலுக்கு 144 வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. போட்டி கடுமையாக இருக்கிறது என்பதால் ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பகன்சிங் குலாஸ்தே, பிரகலாத்சிங் பட்டேல் ஆகியோரை நிறுத்தி இருக்கிறது. மேலும் 4 எம்பிக்கள் பா.ஜ சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டு வரும் பா.ஜ தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா வேறு முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவின் அத்தையும், மபி அமைச்சருமான யசோதரா ராஜே சிந்தியா இந்த தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். உடல்நிலையை அவர் காரணம் காட்டியுள்ளார். இதே போல் ஜோதிராதித்யா சிந்தியாவுடன் பா.ஜவில் இணைந்த பலர் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பியிருக்கிறார்கள். இதுவும் காங்கிரஸ் பக்கம் மலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் பல்வேறு குழப்பங்களால் தாமரை சற்று தளர்ந்து காணப்படுகிறது. முடிவு டிச.3ம் தேதி தெரியும்.

* விஜய்வர்க்கியா தனிரூட்

மபி தேர்தலில் சீட் வேண்டாம் என்று பா.ஜ மேலிடத்திடம் முதன்முதலாக தெரிவித்தவர் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா. ஆனால் இந்தூர் தொகுதி 1ல் அவர் பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனால் வெளிப்படையாக அவர் தனது அதிர்ச்சியை தெரிவித்தார். இருப்பினும் மேலிடம் தனக்கு பெரிய பொறுப்பை(முதல்வர்) அளிக்க தேர்தலில் நிறுத்தி உள்ளதாக கூறி தனிரூட் போட்டு பேசி வருகிறார்.

The post ம.பியை தக்கவைக்குமா பா.ஜனதா?: கமல்நாத் தலைமையில் மல்லுகட்டும் காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : B. Janata ,Congress ,Kamalnath ,Mabi ,Madhya Pradesh ,India ,Bajaj ,Mallukatum ,
× RELATED தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை...