×

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

வானத்தில் கிடக்கும் கேக் துண்டு!

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு எழுபது வயது முதியவர் என்னிடம் வந்தார். கையை அவரது முகத்திற்கு முன்பாக இடதுபுறம் காட்டி, அரைவட்டம் போல் ஒரு பகுதியை வரைந்து காட்டியவர், ‘‘எனக்கு பார்வையில இந்தப் பக்கம் மட்டும் திரை விழுந்த மாதிரி மறைவாத் தெரியுது” என்று கூறினார். விரிவான கண் பரிசோதனையை மேற்கொண்டேன். கண்ணின் அமைப்பு, பார்வை, கண் அழுத்தம், விழித்திரை அனைத்தும் சரியாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.

Field testing என்று சொல்லக்கூடிய கண்களின் பார்வை வட்டத்தைப் பரிசோதித்துப் பார்த்ததில், அவர் சொன்னது போலவே இடது புறத்தில் ஒரு பாதியில் மட்டும் பார்வையற்ற ஒரு இருண்ட பகுதி இருந்தது. அவர் காட்டியது இடது கண்ணின் இடது புறத்தை மட்டும்தான். ஆனால் இடது கண்ணை மூடிவிட்டு வலது கண்ணை மட்டும் பரிசோதிக்கையில் அப்பொழுதும் அதே இடது பகுதியில் பார்வை தெரியவில்லை. ஒரு வட்டமான பிஸ்கட்டின் நடுவில் மேலிருந்து கீழாக ஒரு கோடு கிழித்துக்கொள்ளுங்கள். அந்த கோட்டிற்கு இடதுபுறம் இருக்கும் பகுதி தான் பார்வை தெரியாத பகுதி. இந்த வகை பாதிப்பை Homonymous hemianopia என்போம்.

நம் கண்களின் பின்புறம் விழித்திரையில் இருந்து துவங்கும் ஆப்டிக் நரம்புகள் கொஞ்ச தூரம் பயணித்து ஒன்றோடு ஒன்று optic chiasma என்ற இடத்தில் சேர்கின்றன. சேர்ந்த இடத்திலிருந்து மீண்டும் இரண்டாகப் பிரிந்து மூளையில் தன்னுடைய அடுத்த கட்டப் பயணத்தைத் துவங்குகின்றன. இந்த நரம்புத் தொகுதிகள் மூளையின் வலது மற்றும் இடது புறங்களில் தலாமஸ் என்னும் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் தாமதிக்கின்றன. பின் அங்கிருந்து கதிர்கள் போல் புறப்படும் நரம்புகள் (optic radiation) பகுதிகள் இரண்டு தனித் தொகுப்புகளாகப் பிரிந்து பின்மூளையில் இருக்கும் பார்வைக்கான பகுதியை (visual centre) சென்று சேர்கின்றன. பார்வை நரம்புகள் பயணிக்கும் மூளைப் பகுதியில் எங்கு பிரச்னை இருக்கிறதோ அதற்குத் தகுந்தவாறு பார்வை வட்டத்தில் குறைபாடுகள் தோன்றும்.

ஆப்டிக் நரம்பு தன் பயணத்தின் துவக்கத்தில் சந்திக்கும் இடமான optic chiasma பகுதிக்கு சற்றுக் கீழே தான் பிட்யூட்டரி சுரப்பி அமைந்துள்ளது. பிட்யூட்டரி சுரப்பியில் நீர்க் கட்டிகள், புற்றுக் கட்டிகள் போன்றவை உருவானால் அது இந்தப் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த நிலைதான் அந்தப் பெரியவருக்கும் இருந்தது. கண் நரம்புகளின் வரைபடத்தைக் காட்டி விளக்கம் கொடுத்து, பொருத்தமான நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் ஒருவரிடம் அனுப்பினேன். அவரும் உடனடியாக எம்ஆர்ஐ ஸ்கேன் மேற்கொண்டு நான் குறிப்பிட்ட அதே பிட்யூட்டரி சுரப்பியில் ஒரு சாதாரண கட்டி adenoma இருப்பதைக் கண்டுபிடித்தார். உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

‘‘ஐயோ! மூளையில் கட்டியா?” என்று பயந்த பெரியவரிடம், ‘‘இது மிகச் சிறிய கட்டி தான். நுண்துளை கருவிகளை பயன்படுத்தி மூக்கின் வழியாக உள்நுழைத்து நிபுணர் அதை எளிதில் அகற்றி விடுவார்” என்று நான் தைரியம் சொல்ல, ‘‘எழுபது வயசு ஆச்சு. இனிமே என்ன நடந்தா என்ன?” என்றவர் அறுவை சிகிச்சைக்குத் தயாரானார். அறுவை சிகிச்சை நிபுணர் இந்த மாதிரி கட்டிகளை சரி செய்வதில் வல்லவராயிற்றே. ஒன்றரை மணி நேர அறுவைசிகிச்சையில் கட்டியை மிகத் துல்லியமாக அகற்றி விட்டார். ஒரு தழும்பு கிடையாது, ஒரு தையல் கிடையாது. இரண்டு மூன்று நாட்கள் மூக்கில் பஞ்சு வைத்திருக்க நேர்ந்தது. அவ்வளவுதான். அதன் பின் திரை விழுந்தது போலான அறிகுறியும் சுத்தமாக மறைந்து விட்டது என்றார் பெரியவர். இன்று எண்பது வயதைக் கடந்தும் அவ்வப்போது உற்சாகமாக சாலைகளில் பெரியவர் நடைபோடுவதைப் பார்க்க முடிகிறது.

இன்னொரு பெண்மணி. இவருக்கு ஏற்கனவே மூளையில் ஒரு கட்டி இருந்ததால் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அவருக்கு சில நாட்களாக பார்வை வட்டத்தில் மேல் மற்றும் வெளிப்பகுதியில் (upper and outer aspect) ஒரு முக்கோணம் அளவிற்குப் பார்வை தெரியவில்லை (quadrantanopia) என்றார். கவனமாகப் பரிசோதித்துப் பார்க்கையில், அவர் சொன்ன இடத்தில் வட்டமான கேக்கில் கால் பகுதி அளவிற்கு பார்வை தெரியவில்லை. இதை கண் மருத்துவத்தில் ‘பை இன் தி ஸ்கை’ (pie in the sky) என்று குறிப்பிடுவார்கள்.

மருத்துவப் பாடப் புத்தகங்களை எழுதியவர்கள் ரசனைக்காரர்கள். அதிலும் பலருக்கு உணவு விஷயத்தில் தான் அதிக ரசனை இருந்திருக்கும் போல, பல நோய்களுக்கும், அறிகுறிகளுக்கும் உணவுப் பொருட்களின் பெயர்களை பொருத்தமாய் சூட்டுவதில் வல்லவர்கள். மேலே குறிப்பிட்ட பெண்மணியின் காணாமல் போன பார்வையை வானத்தில் ஒரு கேக் துண்டு கிடப்பதாக கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள்.‌அந்தப் பெண்மணியின் பழைய சிகிச்சை ஆவணங்களைப் பார்வையிட்டதில் முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த பகுதிக்கும் இப்போது ஏற்பட்டிருக்கும் பார்வைக் குறைபாட்டுக்கும் தொடர்பிருப்பது தெரிந்தது.

மீண்டும் நரம்பியல் மருத்துவரிடம் அனுப்பிப் பரிசோதனை செய்ததில் அதே இடத்தில் கட்டி மீண்டும் வளர்ந்திருப்பது தெரிந்தது. அந்தப் பகுதியின் வழியே தான் மேலே குறிப்பிட்ட ஆப்டிக் ரேடியேஷன் நரம்புக் கூட்டத்தின் ஒரு பகுதி செல்கிறது. மேலும் pie in the sky குறைபாடும் இதே பகுதியைத் தான் நமக்கு சுட்டிக் காட்டியது. இதேபோல் ஆப்டிக் ரேடியேசன் நரம்புக் கூட்டத்துக்கு இன்னொரு பிரிவும் இருக்கிறது. அதில் பாதிப்பு ஏற்பட்டால் பார்வை வட்டத்தில் உட்புறம் மற்றும் கீழே (lower and inner aspect) ஒரு முக்கோண அளவிற்குப் பார்வை தெரியாது. இதை ‘Pie on the floor’ defect என்பார்கள்.

இந்தப் பெண்மணிக்கு மூளையில் இரண்டாவது முறையாக அறுவைசிகிச்சை செய்ய நேர்ந்தது. சற்று தீவிரமான கட்டியாக இருந்ததால் சிகிச்சையும் கடினமானது தான். இழந்த பார்வையைத் திரும்பப் பெற முடியவில்லை. ஆனால் வேறு பிரச்னைகள் இல்லாமல் பிழைத்துக் கொண்டார். மற்றொரு கண் நன்றாக இருப்பதாலும், பாதிக்கப்பட்ட கண்ணின் முக்கால்வாசி பகுதி பார்வை சரியாக இருப்பதாலும் அன்றாடப் பணிகளைச் செய்வதில் அவருக்கு சிரமம் இல்லை. ஒருவேளை வாகனம் ஓட்டுபவராகவோ, நுணுக்கமான வேலைகளைச் செய்பவராகவோ இருந்தால் இன்னும் சிரமம் ஏற்பட்டிருக்கக்கூடும்.

பார்வை வட்டத்தில் குறைபாடு, திரை விழுந்தாற் போல் தெரிகிறது என்றவுடனேயே, மூளையில் கட்டி இருக்குமோ என்று பயப்படத் தேவையில்லை. மூளை தொடர்பான பிரச்னைகளில் மட்டுமே பார்வை வட்டக் குறைபாடுகள் நிகழ்வதில்லை. வெகு சாதாரண பிரச்னைகளான கண்களில் உலர்வுத் தன்மை, விழித்திரையில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகள் இவற்றாலும் பார்வை வட்டத்தில் குறை இருப்பதாகத் தோன்றும். ஒப்பீட்டளவில் இவை எளிதில் சரி செய்யக்கூடியவையே.

கனமான கண்ணாடி அணிந்திருப்பவர்கள் சிலர் என் கண்ணில் ஓட்டை விழுந்து விட்டது அதனால் திரை போட்டாற்போல் தெரிந்தது, அவசரமாகப் போய் லேசர் வைத்தேன், ஆபரேஷன் செய்து கொண்டேன் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதுவும் பார்வை வட்டத்தில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு தான். விரைந்து செயலாற்றினால் இதை முழுவதுமாய் சரி செய்ய முடியும். தொடர் பரிசோதனையின் போது விழித்திரையின் ஓரங்களில் இருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து லேசர் மூலம் சரி செய்து விட்டால் அடுத்தடுத்து பார்வை வட்டத்தில் குறைபாடு ஏற்படுவதையும் தடுக்க முடியும்.

மூளைக் கட்டிகள், கண் தொடர்பான பிரச்னைகள் தவிர ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகள் (strokes), சில தன்னுடல் எதிர்ப்பு நோய்கள், கள்ளச்சாராயம் உள்ளிட்ட வேதிப்பொருட்களால் ஏற்படும் நோய்கள் இப்படி பார்வை வட்டத்தில் ஒரு பகுதியில் மட்டும் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. கண் அழுத்த நோயிலும் பார்வை வட்டம் குறைவது தான் முக்கியமான பிரச்னை. கூடவே மாலைக்கண் நோய் போன்ற விழித்திரை பிரச்னைகளிலும் பார்வை வட்டம் குறைவதே (field defects) முதல் அறிகுறி.

நம் பார்வை வட்டத்தில் இருக்கும் குறைபாடுகளைக் கண்டறிவதற்குப் பல பரிசோதனைகள் இருக்கின்றன. நோயாளியின் முன் மருத்துவர் அமர்ந்து கொண்டு தன் ஒரு கண்ணை மூடிக்கொண்டு நோயாளியையும் அதேபோல் செய்யச் சொல்வார். நோயாளியின் வலது கண் மருத்துவரின் இடது கண்ணைப் பார்த்திருக்க, தன் பார்வை செல்லும் இடங்களில் விரலை நகர்த்தி அதே இடங்கள் நோயாளிக்கும் பார்வை சரியாக தெரிகிறதா என்பதை கவனிப்பார் மருத்துவர். இது Confrontation test என்று அழைக்கப்படும் மிக எளிதான பரிசோதனை ஆகும். ஒரு சிறிய அறையில் வைத்து செய்யக்கூடிய Bjerrum Screen, Lister perimeter ஆகிய பழமையான வேறு சில பரிசோதனைகளும் பார்வை வட்டத்தை எளிதாய் கணிக்கக் கூடியவை.

சில நவீன இயந்திரங்களின் வரவு, கண் மருத்துவத்தில் பார்வை வட்டப் பரிசோதனையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. Goldmann perimeter, Humphrey field analyser, Octopus ஆகிய இயந்திரங்கள் மிகத் துல்லியமான அறிக்கைகளை தருகின்றன. இந்தப் பரிசோதனைகளில் நோயாளி ஒரு கணிப்பொறிக்கு முன்பாக அமர்ந்திருப்பார். அவரது பார்வை வட்டத்தில் ஆங்காங்கே சில வெளிச்சப் புள்ளிகள் காட்டப்படும்.

எப்போதெல்லாம் ஒரு வெளிச்சப் புள்ளி தோன்றுகிறதோ அப்போதெல்லாம் தன் கையில் இருக்கும் ரிமோட்டில் ஒரு பொத்தானை நோயாளி அழுத்த வேண்டும். சுமார் 20 முதல் 30 நிமிடத்திற்குள் செய்து விடக் கூடிய இந்தப் பரிசோதனையின் முடிவில் இயந்திரத்தின் கணிப்பொறியே ஒரு விரிவான அறிக்கையை உங்களுக்குத் தரும். அதைப் பார்வையிட்டு அதற்கு ஏற்பட்டிருக்கும் நோயின் தன்மை குறித்து மருத்துவர் உங்களுக்கு விளக்குவார். அடுத்தடுத்து செய்ய வேண்டிய சிகிச்சை முறைகளையும் தீர்மானிப்பார்.

வழக்கமான பரிசோதனையின் போது உங்கள் மருத்துவர் உங்கள் பார்வை வட்டத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்று கூறினால் தயங்காமல் செய்து விடுங்கள். ஏனெனில் இவை மறைந்திருக்கும் பல பிரச்னைகளைத் துல்லியமாய் வெளிச்சம் போட்டுக் காட்டும் திறன் வாய்ந்தவை!

The post கண்ணைக் கட்டிக்கொள்ளாதே appeared first on Dinakaran.

Tags : Akilanda Bharti ,
× RELATED கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!