×

சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 26ம் தேதி சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு

சென்னை: தமிழ்நாட்டில் 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரி, 11 சுயநிதி கல்லூரி, ஆயுர்வேதா பிரிவில் ஒரு அரசு கல்லூரி, 6 சுயநிதி கல்லூரி, யுனானியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி, ஓமியோபதியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி, 11 சுயநிதி கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 2 ஆயிரத்து 64 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர விருப்பம் தெரிவித்தவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 695 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், தேர்வுக்குழு தலைவர் டாக்டர் மலர்விழி, இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன், டாக்டர் மணவாளன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வைஷாலி முதல் இடத்தையும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னையை சேர்ந்த மாணவன் அரிஹரன் முதலிடமும் பெற்றுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 92 இடங்களில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலில் தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த மாணவன் திருமலை முதலிடம் பெற்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக வருகிற 26ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது. வருகிற 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அரசுக்கு ஒப்பளிக்கபட்ட இடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. வருகிற 31ம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், அடுத்த மாதம்(நவம்பர்) 1 மற்றும் 2ம் தேதிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது.

The post சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 26ம் தேதி சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Siddha ,Unani ,Chennai ,Tamil Nadu ,Government Siddha Medical Colleges ,
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...