×

அதிமுக ஆட்சியின்போது ஆவினில் முறைகேடாக செய்த நியமனங்கள் அத்தனையும் ரத்து: தேர்வு முடிவுகளை குப்பையில் வீசிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை

* ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: அதிமுக ஆட்சியின் போது ஆவினில் முறைகேடாக செய்யப்பட்ட நியமனங்களை ரத்து செய்வதோடு, தேர்வு முடிவுகளை குப்பை தொட்டியில் வீசிவிட்டு நியமனம் செய்த அலுவலர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது ஆவின் நிறுவனத்திற்கு மதுரை, விருதுநகர், திருச்சியில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மதுரை, விருதுநகர், ஆவின் பணியாளர்கள் நியமனத்தை அரசு ரத்து செய்தது. தங்களை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் அவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து பணி நீக்க உத்தரவில் தலையிட மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தார். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தங்களுக்கு பணி வழங்க கோரி ஆவின் பணியாளர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்து நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஆவின் பணிக்கான விண்ணப்பங்களை பதிவுத்தபால் அல்லது விரைவு தபாலில் அனுப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் 33 பேரின் விண்ணப்பங்கள் அப்படி அனுப்பப்படவில்லை. விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. முறையாக, முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. எழுத்துத்தேர்வு முடிந்ததும் தேர்வு முடிவுகளை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு நியமனம் செய்ய வேண்டியவர்களிடம் நேரடியாக விண்ணப்பம் பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை ஆவினில் தேர்வு முறைகேடு மட்டுமின்றி குற்றச்சதி, ஆவணங்களை திருத்தியது என பல முறைகேடுகள் நடந்துள்ளன. முறைகேடான நியமனங்களை ரத்து செய்து, அதற்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அலுவலர்களை சுதந்திரமாக நடமாட விட்டால் இதுபோன்ற முறைகேடுகளை அவர்கள் தொடர்வர். மதுரை ஆவின் பணியாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக உத்தரவு நகல் கிடைத்த 48 மணி நேரத்தில் ஆவின் பொதுமேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க வேண்டும். போலீசார் உடனடியாக வழக்கு பதிய வேண்டும்.

மேலும் விருதுநகர் ஆவின் ஊழியர்களுக்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். விண்ணப்பங்களை சரிபார்த்தல், மதிப்பெண் சரிபார்த்தல் மற்றும் முறைகேடு குறித்து புதிதாக விசாரிக்கலாம். குற்றவியல் புகாரும் அளிக்கலாம். பணி நியமனம் பெற்றவர்களின் தகுதி, சான்றிதழ், முன்நடத்தை குறித்து ஆய்வு நடத்தலாம். விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடரலாம். திருச்சி ஆவினில் ஓஎம்ஆர் சீட் எங்கிருக்கிறது என்பது இப்போது வரை மர்மமாக உள்ளது. தேர்வு மற்றும் ஓஎம்ஆர் சீட் முறைகேடு குறித்து ஆவின் பொதுமேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க வேண்டும். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

The post அதிமுக ஆட்சியின்போது ஆவினில் முறைகேடாக செய்த நியமனங்கள் அத்தனையும் ரத்து: தேர்வு முடிவுகளை குப்பையில் வீசிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Aawin ,ICourt ,Madurai ,Aavin ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி