×

சேப்பாக்கத்தில் இன்று நியூசி. – ஆப்கான் மோதல்

சென்னை: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் இப்போட்டி பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது. ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள நியூசிலாந்து, தொடர்ச்சியாக 4வது வெற்றியுடன் முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகிறது. காயத்தில் இருந்து மீண்டு வந்த கேன் வில்லியம்சன், பெர்குசன் இருவரும் வங்கதேசத்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நிலையில், வில்லியம்சன் கை கட்டைவிரலில் எலும்புமுறிவு ஏற்பட்டிருப்பது நியூசி.

அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. உலக கோப்பை அணியில் நீடிக்கும் அவர், ஆப்கானுக்கு எதிராக இன்று விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆப்கான் முதல் ஆட்டத்தில் தடுமாறினாலும் 2வது ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 272 ரன் குவித்ததுடன் போராடிதான் தோற்றது. 3வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்ததால், ஆப்கான் தரப்பு மிகுந்த உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் நியூசிலாந்து சவாலை சந்திக்கிறது. இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால், இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

* நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம் (கீப்பர்/துணை கேப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவிந்த்ரா, மிட்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, டிம் சவுத்தீ, வில் யங்.

* ஆப்கானிஸ்தான்: ஹஷ்மதுல்லா ஷாகிதி (கேப்டன்), அப்துல் ரகுமான், அஸ்மதுல்லா உமர்ஸாய், பஸல்லாக் பரூக்கி, இப்ராகிம் ஸத்ரன், இக்ரம் அலிகில், முகமது நபி, முஜீப் உர் ரகுமான், நஜிபுல்லா ஸத்ரன், நவீன் உல் ஹக், நூர் அகமது, ரகமதுல்லா குர்பாஸ், ரகமத் ஷா, ரஷித் கான், ரியாஸ் ஹஸன்.

* இரு அணிகளும் 2 முறை மட்டுமே சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளன.

* சொந்த மண்ணில் 2015ல் நடந்த உலக கோப்பையில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், இங்கிலாந்தில் 2019ல் நடந்த உலக கோப்பையில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் ஆப்கானிஸ்தானை நியூசிலாந்து வீழ்த்தி உள்ளது.

* எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இதுவரை 25 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளதில் முதலில் பேட் செய்த அணி 10 ஆட்டங்களிலும், சேஸ் செய்த அணி 14 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

* இதுவரை நியூசி இங்கு 5 ஆட்டங்களில் விளையாடி தலா 2 வெற்றி, தோல்வியை சந்தித்துள்ளது (ஒரு ஆட்டம் ரத்து).

* ஆப்கான் முதல்முறையாக சென்னையில் விளையாட உள்ளது.

The post சேப்பாக்கத்தில் இன்று நியூசி. – ஆப்கான் மோதல் appeared first on Dinakaran.

Tags : Cheppak ,Chennai ,league ,ICC World Cup ODI ,New Zealand ,Afghanistan ,Newsi ,Chepauk ,Dinakaran ,
× RELATED மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை