×

வடகிழக்கு பருவ மழையையொட்டி டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்: ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டும், டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

கருத்தரங்கிற்கு ஒன்றியக் குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கே.ஆர்.ஜவஹர்லால் மேற்பார்வையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ஜி.குணசேகரன், ஜெ.மாணிக்கம் முன்னிலை வகித்தனர். சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மோகன் கலந்துக்கொண்டு குளோரிநேசன் செய்முறை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். வட்டார மருத்துவ அலுவலர் சுபாஷ் சந்திர போஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

மேலும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பிரதி மாதம் 5ம் தேதி மற்றும் 20ம் தேதி சுத்தம் செய்ய வேண்டும். தினந்தோறும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் தண்ணீர் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரிநேசன் செய்யப்பட வேண்டும். அதாவது 1000 லிட்டருக்கு 4 கிராம் வீதம் தினந்தோறும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரிநேசன்செய்ய வேண்டும்.
சுகாதார ஆய்வாளர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குளோரிநேசன் செய்யப்பட்டுள்ளதை க்ளோரோஸ்கோப் மூலம் உறுதி செய்ய வேண்டும்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பரிசோதனை செய்யும் போது 2 பிபிஎம் இருக்க வேண்டும். டெய்ல் எண்டில் 0.2 பிபிஎம் இருக்க வேண்டும். இவ்வாறு தினந்தோறும் குளோரிநேசன் செய்தால் காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும். தண்ணீர் பிடித்து வைத்து இருக்கும் சிமென்ட் தொட்டிகள், பேரல்கள் போன்றவற்றில் டெங்கு கொசு குழு முட்டையிடாமல் தடுப்பதன் மூலம் தண்ணீர் மூலம் பரவக்கூடிய நோய்களான வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முடியும் என்றார். வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பிரதி மாதம் முதல் வாரம் அனைத்து ஊராட்சிகளில் உள்ள டயர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

இரண்டாவது வாரம் பள்ளி, கல்லூரிகள் போன்றவற்றில் டெங்கு கொசு புழு உற்பத்தியாக கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பிளாஸ்டிக் கப்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும், மூன்றாவது வாரம் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகாமல் அப்புறப்படுத்த வேண்டும், 4வது வாரத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் இதர கட்டிடங்கள் போன்றவற்றில் மேற்கூரையில் தண்ணீர் தேங்காதவாறு அப்புறப்படுத்த வேண்டும் மற்றும் டெங்கு கொசு புழு உற்பத்தியாக கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் கப்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஈக்காடு வட்டாரத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்கள் வேலன், செல்வம், குணசீலன், குகன் மணி, ஹரிகிருஷ்ணன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

The post வடகிழக்கு பருவ மழையையொட்டி டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்: ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Dengue Awareness Seminar ,North East Monsoon ,Panchayat ,Thiruvallur ,Panchayat Council ,
× RELATED கோடை காலம் தொடங்க உள்ளதால்...