×

அரசு பள்ளி சுற்றுச்சுவர் உடைப்பு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு: உடனே சீரமைக்க உத்தரவு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரை மர்ம நபர்கள் உடைத்து சேதமடைத்தது குறித்து ‘‘தினகரன்” நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நேற்று ஆய்வு செய்தார். சுவரை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார். ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்போது இப்பள்ளியில், பழைய வகுப்பறைகள் அகற்றப்பட்டு புதிதாக 40 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், இப்பள்ளியின் சுற்றுச்சுவர் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த சுற்றுச்சுவரை பள்ளி விடுமுறை நாட்களில் மர்ம நபர்கள் சிலர் உடைத்து விட்டனர். இதன் வழியாக மாணவர்கள் சிலர் வகுப்புகளை ”கட்” அடித்து விட்டு வெளியே சென்று விடுகிறார்கள். எனவே சேதமடைந்த பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து ‘‘தினகரன்” நாளிதழில் நேற்று (17ம் தேதி) படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர், நேற்று பள்ளிக்கு சென்று மர்ம நபர்கள் ஓட்டை போட்ட சுற்றுச்சுவரை பார்வையிட்டனர். மேலும் இதை உடனே சீரமைக்க வேண்டும் எனவும், வெளியாட்கள் யாரும் பள்ளியின் உள்ளே வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அப்போது பள்ளி மேலாண்மை குழுவினர், ஓரிரு நாட்களில் சுற்றுச்சுவரை சீரமைப்பதாக உறுதியளித்தனர். ஆய்வின்போது பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயச்சந்திரன், துணை தலைமையாசிரியர் செந்தில் வேலன், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உள்பட பலர் உடனிருந்தனர்.

* ஆசிரியர்கள் மீது புகார்
ஆய்வுக்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதியிடம் பள்ளி மேலாண்மை குழு சார்பில், ‘‘ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வருவதில்லை, அப்படி வந்தாலும் வகுப்பிற்கு செல்வதில்லை’’ என புகார் தெரிவித்தனர். பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமையில், ஆசிரியர்களின் அவசர கூட்டம் நடந்தது. இதில் கல்வி அதிகாரி ஆசிரியர்களிடம் கூறும்போது, ‘‘ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்கள் ஒழுக்கமாக இருக்க அறிவுரை வழங்க வேண்டும், ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வரவேண்டும், மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் அவர்கள் ஏன் வரவில்லை என்று வீட்டிற்கு சென்று விசாரிக்க வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.

The post அரசு பள்ளி சுற்றுச்சுவர் உடைப்பு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு: உடனே சீரமைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Education Officer ,Oothukottai ,Oothukottai Government High School ,
× RELATED அரசு பள்ளி ஆண்டு விழா