×

கொலு படிகளின் தத்துவம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தமிழில் ‘கொலு’ என்றால் ‘அழகு’ என்று பொருள். நவராத்திரி சமயத்தில், அழகிய பொம்மைகளை அழகான முறையில் படிப்படியாக அடுக்கி வைத்து இறைவனை வழிபடும் அழகுமிக்க முறையையே கொலு என்று சொல்கிறோம். இந்தப் படிக்கட்டுகளின் எண்ணிக்கை ஒற்றைப் படையில் இருக்க வேண்டும் என்பது மரபாகும். எனவே அவரவர் வசதிக்கேற்ப மூன்று, ஐந்து, ஏழு, அல்லது ஒன்பது படிக்கட்டுகள் அமைத்து அவற்றில் கொலு பொம்மைகளை வைப்பார்கள்.

அதற்கும் மேல், பதினொன்று, பதின்மூன்று என்று பல படிகள் வைக்கும் வழக்கமும் உள்ளது. எனினும் இவற்றுள் ஒன்பது படிக்கட்டுகளில் கொலு வைப்பது மிகவும் விசேஷமானதாகக் கருதப்படு கிறது. அதன் பின்னால், ஒரு தத்துவமும் உள்ளது. அந்தத் தத்துவம் என்ன?

1. நவராத்திரியின் ஒன்பது நாட்கள்

ஒன்பது இரவுகள் நடைபெறும் பண்டிகையானபடியால், நவராத்திரி (நவ+ராத்திரி) என்று இப்பண்டிகையை அழைக்கிறோம். எனவே பண்டிகையின் ஒன்பது நாட்களைக் குறிக்கும் விதமாக ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன என்று சிலர் சொல்கிறார்கள்.

2. பார்வதியின் ஒன்பது வடிவங்கள்

நவராத்திரியில் ஒன்பது வடிவங்களில் பார்வதிதேவி வழிபடப்படுகிறாள்.
1. மலையரசனின் மகளான சைலபுத்ரி
2. தட்சனின் மகளான பிரம்மசாரிணி
3. சிவனை மணந்த சந்திரகாந்தா
4. செழிப்பினை நல்கும் கூஷ்மாண்டா
5. முருகனின் தாயான ஸ்கந்தமாதா
6. வீரத்தின் வடிவான காத்யாயினி
7. உக்கிர வடிவுடைய காலராத்திரி
8. சாந்தமே வடிவான மஹாகௌரி
9. சித்திதாத்ரி அல்லது சரஸ்வதி

ஆகிய அந்த ஒன்பது வடிவங்களை நினைவூட்டும் விதமாக, ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன என்பது சிலரின் கருத்தாகும்.

3. மகாலட்சுமியின் ஒன்பது வடிவங்கள்

வைணவ நெறியில் நவராத்திரியில் உள்ள ஒன்பது நாட்களும் மகாலட்சுமியின் பல்வேறு வடிவங்களுக்கென்று அர்ப்பணிக்கப் படுகின்றன.

1. ஆதி லட்சுமி
2. தன லட்சுமி
3. தான்ய லட்சுமி
4. சந்தான லட்சுமி
5. ஐஸ்வரிய லட்சுமி
6. கஜ லட்சுமி
7. வீர லட்சுமி
8. விஜய லட்சுமி

ஆகிய அஷ்ட லட்சுமிகளுக்கு நவராத்திரியின் முதல் எட்டு நாட்கள் அர்ப்பணிக்கப் படுகின்றன. மகாநவமி என்று சொல்லப்படும் ஒன்பதாம் நாள் ஹயக்ரீவரின் மடியில் அமர்ந்திருக்கும் லட்சுமிக்கு அர்ப்பணிக்கப் படுகிறது. எனவே, அஷ்ட லட்சுமிகளையும், லட்சுமி – ஹயக்ரீவரையும் குறிக்கும் விதமாக ஒன்பது படிக்கட்டுகள் வைக்கப்படுகின்றன என்றும் சொல்வதுண்டு.

4. நவக்கிரகங்கள்

கிரகங்களின் எண்ணிக்கை ஒன்பதாக இருப்பதால், அவற்றின் சாந்திக்காக ஒன்பது வரிசைகளில் கொலு வைக்கப்படுவதாகவும் சொல்வார்கள்.

5. நவ ரசங்கள்

காவியங்களில் ஒன்பது வகையான ரசங்கள் (சுவைகள்) உள்ளதாகப் பெரியோர்கள் கூறுவர்:

1. காதல்
2. நகைச்சுவை
3. கோபம்
4. கருணை
5. அழுகை
6. அச்சம்
7. வீரம்
8. வியப்பு
9. சாந்தம்

ஆகிய இந்த ஒன்பது சுவைகளுள், ஒவ்வொரு சுவையையும் ஒவ்வொரு படிக்கட்டின் மூலம் வெளிப்படுத்தும் விதமாக ஒன்பது படிக்கட்டுகள் வைப்பதாகவும் சொல்வார்கள். வாழ்க்கையில் இன்பம், துன்பம் உள்ளிட்ட அனைத்தும் கலந்தே இருக்கும் என்ற வாழ்க்கைப் பாடத்தை இது நமக்கு உணர்த்துகிறது.

6. நவ ரத்தினங்கள்

வைரம், வைடூரியம், முத்து, மரகதம், மாணிக்கம், பவளம், புஷ்பராகம், கோமேதகம், நீலம் ஆகிய ஒன்பது ரத்தினங்களைக் கொண்டு அலங்காரம் செய்வது மிகவும் சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது. எனவே, அந்த ஒவ்வொரு ரத்தினத்துக்கும் ஒரு படிக்கட்டு என்ற ரீதியில், ஒன்பது படிக்கட்டுகள் அமைத்துக் கொலு வைப்பது, நவரத்தினங்களால் அலங்கரிப்பதற்குச் சமமானதாகும் என்பது அலங்கார சாஸ்திர வல்லுனர்களின் கருத்தாகும்.

7. மூன்று குணங்கள் மூன்று படிகள்

சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்று மூன்று விதமான குணங்கள் உண்டு என்பதை நாம் அறிவோம். சாந்தமாக இருக்கும் நிலை சத்துவ குணமாகும். காமம், கோபம் நிறைந்த நிலை ரஜோ குணமாகும். சோம்பலும் தூக்கமும் கொண்ட நிலை தமோ குணமாகும். கொலுப் படிகளில் உள்ள ஒன்பது படிக்கட்டுகளுள் கீழே உள்ள மூன்று படிகளில் மளிகைக் கடைக்காரர், காவலாளி போன்ற பொம்மைகளும், உணவு வகைகளும், தாவரங்களும் வைக்கப்படும். அம்மூன்று படிகளும் தமோ குணப் படிகள் என்று சொல்வார்கள்.

நடுவில் உள்ள மூன்று படிகளில் தேவர்கள், தேவதைகள், மன்னர்கள் உள்ளிட்டவர்களின் பொம்மைகள் வைக்கப்படும். இம்மூன்றும் ரஜோ குணப் படிகளாகும்.மேலே உள்ள மூன்று படிகளில் இறைவன் இறைவியின் வடிவங்கள் வைக்கப்படும். அந்த மூன்றும் சத்துவ குணப் படிகளாகும். தமோ குணம் மற்றும் ரஜோ குணத்திலிருந்து ஒரு மனிதன் உயர்ந்து சத்துவ குணத்தை அடைய வேண்டும் என்பதை இது காட்டுகிறது. மூன்று, ஐந்து அல்லது ஏழு படிக்கட்டுகள் கொண்ட கொலு வைத்தாலும், அவற்றுள் கீழே உள்ள ஒருசில படிகள் தமோ குணத்தைக் குறிப்பதாகவும், நடுவில் உள்ள சிலபடிகள் ரஜோ குணத்தைக் குறிப்பதாகவும், மேல் வரிசையிலுள்ள படிகள் சத்துவ குணத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

8. வேதாந்த விளக்கம்

வேதாந்தங்கள் நமது உடலை ‘நவத்துவாரபுரி’ – ‘ஒன்பது வாயில்கள் கொண்ட ஊர்’ என்று அழைக்கும். ஆம், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்கு துவாரங்கள், ஒரு வாய், மல துவாரம், ஜல துவாரம் என மொத்தம் ஒன்பது வாயில்கள் நம் உடலுக்கு இருக்கின்றன.

“மார்வம் என்பதோர் கோயில் அமைத்து
அதில் மாதவன் என்பதோர் தெய்வம் நாட்டி”

– என்று பெரியாழ்வார் பாடிய படி, ஒன்பது வாயில் கொண்ட இந்த உடலை இறைவன் வசிக்கும் கோயிலாகக் கருதி, நமக்குள் உறைந்திருக்கும் இறைவனை வழிபட வேண்டும் என்று உணர்த்தவே ஒன்பது படிக்கட்டுகளில் கொலு வைப்பதாக வேதாந்திகள் கூறுவர்.

கொலு என்பதற்கு ‘சாந்நித்தியம்’ என்ற பொருளும் உண்டு. ஒன்பது படிக்கட்டுகளில் உள்ள பொம்மைகளில் சாந்நித்தியத்தோடு இருக்கும் இறைவன், ஒன்பது வாயில்கள் கொண்ட நம் உடலிலும் அதே சாந்நித்தியத்தோடு உறைகிறார் என்பது தாத்பரியம்.ஆனால், நமக்குள் இறைவன் இருப்பதை நம் எல்லோராலும் உடனடியாக அறிய முடிவதில்லை. அதைப் படிப்படியாகத் தானே அறிய முடியும்? அதனால்தான் ஒரு மனிதனின் ஆன்மிக முன்னேற்றதைக் குறிக்கும் விதமாக ஒன்பது படிக்கட்டுகள் வைக்கப்படுகின்றன. தொடக்கத்தில் நாம் எல்லோரும் ஓர் அறிவுள்ள புல், செடி, கொடிகளாக, அறிவு விரிவடையாத நிலையில் இருந்தோம். அதைக் குறிப்பதற்காகச் செடி, கொடிகள், தாவரங்கள், பூங்காக்கள், விவசாய நிலங்கள் ஆகியவை கீழே முதல் படியில் வைக்கப்படுகின்றன.

இறைவனின் அருளால், சற்றே அறிவு வளர்ச்சி பெற்று ஈரறிவு உள்ள பிராணிகளாகிய நத்தை, சங்கு முதலியவைகளாக அடுத்து பிறக்கிறோம். அதைக் குறிக்கவே, சங்கு, நத்தை முதலியவற்றின் பொம்மைகள் இரண்டாம் படியில் வைக்கப்படுகின்றன. மேலும், இறைவனின் அருள் கிட்டவே, மேலும் அறிவு வளரப் பெற்று, மூன்று அறிவு கொண்ட எறும்பாக நாம் பிறக்கிறோம். அதைக் குறிக்கவே எறும்பு உள்ளிட்ட ஊர்ந்து செல்லும் பிராணிகளின் பொம்மைகள் மூன்றாம் படியில் வைக்கப்படுகின்றன. இறைவன் தனது அருட்பார்வையை மேலும் நம் மேல் செலுத்தவே, நாம் மேலும் அறிவு முன்னேற்றம் அடைந்து நான்கு அறிவு உடைய நண்டு, வண்டு போன்ற உயிரினங்களாகப் பிறக்கிறோம். அதைக் குறிக்கும் வகையில், நண்டு, வண்டு உள்ளிட்டவற்றின் உருவங்கள் நான்காம் படியில் வைக்கப்படுகின்றன.

மேலும், அறிவு விரிவடையவே, ஐந்தறிவு உள்ள பறவை, விலங்குகளாக நாம் பிறக்கிறோம். அதைக் குறிக்கும் விதமாக, ஆயர்கள் மாடு மேய்ப்பதைச் சித்தரிக்கும் பொம்மைகள், மூன்று குரங்குகள் அமர்ந்திருக்கை போன்ற பறவை – விலங்குகளின் உருவங்கள் ஐந்தாம் படியில் வைக்கப்படுகின்றன. அதன்பின், இறையருளால் கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை நாம் எய்தினோம் என்று உணர்த்தவே, ஆறாம் படியில், காவலாளிகள், மரப்பாச்சி பொம்மைகள், வியாபாரிகள், விவசாயிகள் என மனித வடிவங்கள் வைக்கப்படுகின்றன.

மனிதப் பிறவி எடுத்தபின், இவ்வுலக சுகங்களிலே ஈடுபடாமல், இறைவனை நோக்கிய பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று உணர்த்தவே, மனித நிலையில் இருந்து இறைபக்தியால் மேல் நிலையை அடைந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஆச்சாரியர்கள் உள்ளிட்டவர்களின் வடிவங்கள் அவரவர் வழக்கப்படி ஏழாம் படியில் வைக்கப்படுகின்றன. எட்டாம் படியில், இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள தேவர்கள், நவக்கிரக தேவதைகள், அஷ்ட திக் பாலகர்கள் உள்ளிட்டவர்களின் பொம்மைகள் வைக்கப்படுகின்றன. தேவலோக சுகங்களில் உள்ள ஆசையைக் கடந்தால்தான், அதற்கும் மேல் படியில் உள்ள இறைவனை நாம் அடைய முடியும் என்பதை உணர்த்தவே, இப்படிக்கட்டு இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவே வைக்கப்பட்டுள்ளது.

மேல் படியான ஒன்பதாம் படியில், இறைவன் – இறைவியின் உருவங்கள் வைக்கப் படுகின்றன. ஓரறிவு கொண்ட புழுவாகவும், செடி, கொடியாகவும் பிறந்து, அதன்பின் ஊர்வன, பறப்பன எனப் பல்வேறு பிறவிகள் எடுத்து, அதன்பின் மனிதப் பிறவி பெற்று, இறைவனின் அருளால் நிறைவாக இறைவனை அடைகிறோம் என்பதை இந்த ஒன்பதாம் படி உணர்த்துகிறது.ஒன்பது வாயில் கொண்ட உடலில் வசிக்கும் ஜீவாத்மாவாகிய நமக்கு உயிராகப் பரமாத்மா இருக்கிறார் என்று நாம் அந்நிலையில் உணர்கிறோம். நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் முதலிய அனைத்தும் இறைவனால் தாங்கப்பட்டு, இறைவனால் இயக்கப்பட்டு, இறைவனை விட்டுத் தனித்திருக்க முடியாதவைகளாய் இருப்பது போல், ஜீவாத்மாக்களும் இறைவனாலேயே தாங்கப்பட்டு, இறைவனாலேயே இயக்கப்பட்டு, இறைவனை விட்டுத் தனித்திருக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்னும் ஞானம் ஏற்படும்.

9. வைகுண்டத்தை அடைவிக்கும் படிக்கட்டுகள்

புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில், திருமலையப்பனின் மணியின் அம்சமாக அவதரித்த வேதாந்த தேசிகன், பரமபத சோபானம் என்னும் நூலில், முக்தியடையும் ஒவ்வொரு ஜீவாத்மாவும்,

1. விவேகம் – உலகிலுள்ள அறிவுள்ள, அறிவற்ற பொருட்களைப் பகுத்து அறியும் ஆற்றல்.

2. நிர்வேதம் – இறைவனை அடையாமல் இவ்வளவு காலம் கழித்து விட்டோமே என்ற வருத்தம்.

3. விரக்தி – உலகியல் இன்பங்களில் நாட்டம் கொள்ளாது இருத்தல்.

4. பீதி – பிறவிப் பிணியைக் கண்டு அஞ்சுதல்.

5. பிரசாத ஹேது – இறைவனைச் சரணடைதல்.

6. உத்கிரமணம் – தலையிலுள்ள நாடியின் வழியாக உடலை விட்டுப் புறப்படுதல்.

7. அர்ச்சிராதி மார்க்கம் – வைகுண்டத்தை நோக்கிய பயணம்.

8. திவ்யதேசப் பிராப்தி – வைகுண்டத்தை அடைதல்.

9. பராப்தி – இறைவனைத் தரிசித்து இன்புறுதல்.

ஆகிய ஒன்பது படிகளைக் கடந்து இறைவனை அடைவதாகக் கூறுகிறார். அந்த ஒன்பது படிகளை நவராத்திரி கொலுவின் ஒன்பது படிக்கட்டுகள் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

The post கொலு படிகளின் தத்துவம் appeared first on Dinakaran.

Tags : Navratri ,
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை