×

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் 10 ஆண்டு நிறைவு விழா மாநாடு இந்தியா மீண்டும் புறக்கணிப்பு: ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்பு

பீஜிங்: சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடத்தப்படும் சர்வதேச மாநாட்டை இந்தியா மீண்டும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இதில் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ரஷ்ய அதிபர் புடின் நேரில் பங்கேற்கிறார். கண்டம் விட்டு கண்டம் இணைப்பை ஏற்படுத்தி வர்த்தகத்தை பெருக்க சீனா அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2013ம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை அறிவித்தார். ‘ஒரே பிராந்தியம், ஒரே சாலை’ என சீனாவில் கூறப்படும் இத்திட்டத்தின் கீழ் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் சீனா கடன் உதவி மூலம் துறைமுகங்கள், சாலை, ரயில் வழித்தடங்களை மேம்படுத்தி வருகிறது. சீனாவிடம் வாங்கிய கடனால் அந்த நாடுகள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது ஒருபுறம் இருந்தாலும், சீனா இத்திட்டத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சாலை அமைக்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள துறைமுகங்களில் சீனாவின் போர் கப்பல்கள் நிறுத்தப்படுகின்றன. இது இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலானது என்பதால் ஆரம்பத்தில் இருந்தே ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவை ஒட்டி 2 நாள் சர்வதேச மாநாடு சீன தலைநகர் பீஜிங்கில் இன்று தொடங்குகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்த சீனா கடந்த 10 ஆண்டுகளில் நடத்தும் 3வது சர்வதேச மாநாடு இது.

இதற்கு முன் 2 முறையும் சீனா மாநாட்டை புறக்கணித்த இந்தியா, இம்முறையும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்காது என அறிவித்துள்ளது. அதே சமயம் 140 நாடுகளை சேர்ந்த 4000 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரில் கலந்து கொள்ள இருப்பதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல், புடினும் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சீன அரசு ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘சில நாடுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா இத்திட்டத்தை விரிவுபடுத்துவதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் நாங்கள் வேறு விதமாக பார்க்கிறோம். ஒத்துழைப்புக்கான பாலமாக நாங்கள் கருதுகிறோம்’’ என கூறி உள்ளார்.

* புடினுக்கு ஐஸ் வைக்க காரணம்?
அமெரிக்காவை எதிர்ப்பதில் சீனாவும், ரஷ்யாவும் முறைசாரா கூட்டணியாக செயல்பட்டு வரும் நிலையில், இஸ்ரேல், ஹமாஸ் போர் இரு நாடுகளுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில், இஸ்ரேல் உடனான உறவை தொடரும் அதே சமயத்தில் சிரியா, ஈரான் உடனான வர்த்தக உறவையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தில் சீனா உள்ளது. இதனால் சிரியா, ஈரானுடன் நட்பு பாராட்டும் ரஷ்ய அதிபர் புடினை மிக உயர்ந்த விருந்தினர்களில் ஒருவராக சீனா அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டம் 10 ஆண்டு நிறைவு விழா மாநாடு இந்தியா மீண்டும் புறக்கணிப்பு: ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : India ,China ,Belt and Road Initiative ,President ,Putin ,Beijing ,and Road ,
× RELATED மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன...