×

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மீது தாமாகவே உச்ச நீதிமன்றம் நடவடிக்கை: துரை வைகோ வலியுறுத்தல்

திருச்சி: கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக சார்பில் திருச்சியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தராமல் வஞ்சித்து வரும் கர்நாடக அரசு மற்றும் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமை வகித்தார்.
திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கரூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் துரை வைகோ அளித்த பேட்டி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்காததால் 3 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் கருகியது. இதனால் உரிய இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 100 நாள் வேலை வாய்ப்பை நம்பி பல கோடி பேர் உள்ளனர். ஆண்டுக்கு ஒன்றிய அரசு ரூ.2.70 லட்சம் கோடியை 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்துக்கான நிதியை ஒன்றிய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது.

கடந்த ஆண்டு 72 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த ஒன்றிய அரசு, நடப்பாண்டில் 21 சதவீதம் குறைவாக 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. கர்நாடகாவிடமிருந்து காவிரிநீர் பங்கீடு பெறுவதற்கு சட்ட ரீதியாக பல்வேறு முயற்சியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் நமது முயற்சிக்கான எந்த பலனையும் கர்நாடக அரசு வழங்காமல் இருக்கிறது. எனவே உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறுவை இழப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.13,000 அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிட போவதில்லை. கழகத்தின் மூத்த நிர்வாகிகள், வரபோகின்ற தேர்தலில் திமுகவுடன் உரிய பேச்சு வார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுப்பார்கள். இந்த தேர்தலில் யார் பங்குபெற்றாலும், பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மீது தாமாகவே உச்ச நீதிமன்றம் நடவடிக்கை: துரை வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Karnataka government ,Durai Vaiko ,Tiruchi ,Madhyamik ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது;...