×

ஹாட்ரிக் வெற்றியா? தோல்வியா? தென் ஆப்ரிக்கா – நெதர்லாந்து பலப்பரீட்சை

தர்மசாலா: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 15வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா-நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. தர்மசாலாவில் இன்று நடைபெறும் இந்த ஆட்டத்தில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணி ஹாட்ரிக் வெற்றியை இலக்காக கொண்டு விளையாட உள்ளது. அதே நேரத்தில் ஸ்காட் எட்வர்ட் தலைமையிலான நெதர்லாந்து அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க களம் காண இருக்கிறது. தெ.ஆப்ரிக்கா ஏற்கனவே இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்தி இருக்கிறது. கூடவே டி காக், மாலன், மார்க்ரம், டுசன் வீரர்களால் அதிக சதம் விளாசிய அணியாக தெ.ஆப்ரிக்காக திகழ்கிறது.

நெதர்லாந்து அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது. வலுவான நிலையில் உள்ள தெ.ஆப்ரிக்காவை வீழ்த்த நெதர்லாந்து கடுமையாக போராட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் அணி அடித்த அடி, இங்கிலாந்துக்கு இடி போல் இறங்கியது. நடப்பு சாம்பியனை ஆப்கான் வீழத்தியிருப்பது நெதர்லாந்து போன்ற அணிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும்.
அதனால் இன்றயை ஆட்டத்தில் ஏதாவது அதிசயத்தை நிகழ்த்த நெதர்லாந்து போராடும். அதை அனுபவ அணி தெ.ஆப்ரிக்கா தடுத்து விளையாடும் என்பதால் இன்றைய ஆட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

* உலக கோப்பையில்…
இந்த 2 அணிகளும் உலக கோப்பை தொடர்களில் 2 முறை மோதியுள்ளன. அவற்றில் 2007ம் ஆண்டு 227ரன் வித்தியாசத்திலும், 2011ம் ஆண்டு 231ரன் வித்தியாசத்திலும் தெ.ஆப்ரிக்கா அணிதான் வென்றுள்ளது.

* மற்ற அணிகளுடன்…
இந்த அணிகள் மற்ற நாடுகளுடன் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் தெ.ஆப்ரிக்கா வெற்றிப் பெற்றுள்ளது. ஆனால் நெதர்லாந்து 2-3 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது. அதிலும் கடைசி 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

* நடப்பு உலக கோப்பையில்…
நடந்து முடிந்த லீக் ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் விளையாடி இருக்கின்றன. தெ.ஆப்ரிக்கா முதல் ஆட்டத்தில் 102ரன் வித்தியாசத்தில் இலங்கையையும், 134ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும் வென்றுள்ளது. நெதர்லாந்து முதல் ஆட்டத்தில் 81 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடமும், 2வது ஆட்டத்தில் 99ரன் வித்தியாசத்தில் நியுசிலாந்திடம் தோல்வியை தழுவியது.

* தர்மசாலாவில்…
இந்த 2 அணிகளும் இதுவரை தர்மசாலா அரங்கில் விளையாடியதே இல்லை. இதுவரை அங்கு நடந்த 6 சர்வதேச ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணி 2 ஆட்டங்களிலும், 2வதாக பேட்டிங் செய்த அணி 4 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

* நேருக்கு நேர்
சர்வதேச களத்தில் இந்த 2 அணிகளும் இதுவரை 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் 6 ஆட்டங்களில் தெ.ஆப்ரிக்கா வெற்றிப் பெற்றுள்ளது. எஞ்சிய ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.

* கடைசியாக…
இரண்டு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் தெ.ஆப்ரிக்கா 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒரு மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது ஆட்டம்.

The post ஹாட்ரிக் வெற்றியா? தோல்வியா? தென் ஆப்ரிக்கா – நெதர்லாந்து பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : South Africa ,Netherlands ,Dharamsala ,ICC Cricket World Cup ,Dinakaran ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...