×

செவ்வாயில் பிறந்தவன் என்பதால் எனது வரவு தொகுதிக்கு மங்களகரமாக அமையும்: சவுகானை எதிர்க்கும் காங். ‘ஹனுமன்’ அதிரடி

போபால்: மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இம்முறையும் தனது புத்னி தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிட உள்ளார். 1990ம் ஆண்டு முதல் முறையாக இத்தொகுதியில் களமிறங்கிய சவுகான், 2006, 2008, 2013, 2018 என கடைசியாக 4 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். அசைக்க முடியாத அவரது கோட்டையில் காங்கிரஸ் சார்பில் டிவி நடிகர் விக்ரம் மஸ்தல் இம்முறை களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2008ல் டிவி சேனலில் வெளியான பிரபலமான ராமாயண தொடரில் ஹனுமன் வேடத்தில் நடித்தவர் 41 வயதாகும் விக்ரம் மஸ்தல். கடந்த ஜூலை மாதம் கமல்நாத் முன்னிலையில் காங்கிரசில் இணைந்த விக்ரம் மஸ்தல், தான் ஒரு தீவிர ஹனுமன் பக்தர் என்றும் காங்கிரஸ் சிறுபான்மையினருக்கு மட்டுமே ஆதரவான கட்சி அல்ல, மென்மையான இந்துத்துவா கொள்கைகளுக்கும் ஆதரவானது என மக்கள் மத்தியில் மாற்றத்தை கொண்டு வருவேன் என்றும் கூறி வருகிறார்.

இவர் அளித்த பேட்டியில், ‘‘நான் செவ்வாய்கிழமை பிறந்தேன். செவ்வாயில்தான் திரையுலக வாழ்க்கையை தொடங்கினேன். செவ்வாயில்தான் அரசியலிலும் நுழைந்தேன். எனவே எனது வரவு புத்னி தொகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் மங்களகரமாக அமையும். 4 முறை முதல்வராக இருந்தவரின் தொகுதி போலவா புத்னி இருக்கிறது? 18 ஆண்டில் இங்கு எந்த வளர்ச்சியும் இல்லை. சல்கான்பூர் கோயில் கடந்த 6 மாதத்திற்கு முன் திருட்டு நடந்தது. முதல்வரின் தொகுதியில் கோயில்களுக்கே பாதுகாப்பில்லை என்றால், அதிலிருந்தே மக்களின் நிலையை அறியலாம். ஹனுமனின் ஆசீர்வாதத்தால் காங்கிரசில் இணைந்த நான் தொகுதிக்கு முழு வளர்ச்சியை உறுதி செய்வேன்’’ என்றார்.

The post செவ்வாயில் பிறந்தவன் என்பதால் எனது வரவு தொகுதிக்கு மங்களகரமாக அமையும்: சவுகானை எதிர்க்கும் காங். ‘ஹனுமன்’ அதிரடி appeared first on Dinakaran.

Tags : Mars ,Congress ,Chauhan ,Hanuman ,Bhopal ,Madhya Pradesh ,Chief Minister ,Shivraj Singh Chouhan ,BJP ,Putni ,Chouhan ,
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?