×

ஆடம்பரத்தில் கோடீஸ்வரர்களை மிஞ்சிய மோசடி மன்னன் பொதுமக்களின் ஆசையை தூண்டி ரூ.150 கோடி சுருட்டிய வாலிபர் கைது: திரைபடம் எடுத்து உயர் ரக கார்களில் உல்லாச உலா

சங்கராபுரம்: சினிமாவில் வருவதுபோல நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களின் ஆசையை தூண்டி ரூ.150 கோடி வரை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தை சேர்ந்தவர் சமீர் அஹமத். ஆட்டோ டிரைவர். இவர் சென்னைக்கு சென்று அங்கு ஒரு கம்பெனியில் கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் டிரேடிங் செய்து, பலரை அதற்கு ஊக்குவித்து தங்கம் பரிசாக பெற்றார். இந்த டிரேடிங் மூலம் அதிக லாபம் சம்பாதிக்க நினைத்த சமீர், முரார்பாளையத்தில் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனம் துவங்கினார்.

இவர் உயர் ரக கார்களில் வலம் வருவது, 10க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள், 5க்கும் மேற்பட்ட உதவியாளர்களுடன் டீ குடிக்க புதுச்சேரி, டிபன் சாப்பிட சென்னை, மதிய உணவு சாப்பிட கோயம்புத்தூர் செல்வது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆடம்பரமாக இருந்துள்ளார். இவர் முரார்பாளையம் கிராமத்தில் ஆரம்பித்த கம்பெனிக்கு பல ஏஜென்டுகளை சேர்த்து அவர்களுக்கு என்ஃபீல்ட் பைக், ஆப்பிள் மொபைல், கோட் சூட் போன்றவற்றை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் ஏஜென்டுகளின் உறவினர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரை இதில் முதலீடு செய்யும் வகையில் திட்டத்தை வகுத்து பெரிய கோடீஸ்வரன் போல் தோற்றத்தை அளித்துள்ளார்.

இதனை நம்பிய பொதுமக்கள் நிலம், தோட்டம், அண்டா, குண்டா எல்லாம் அடகு வைத்து சமீர் கம்பெனியில் முதலீடு செய்தனர். அதில் ரூ.1 லட்சம் கொடுத்தால் மாதம் ரூ.15 ஆயிரம் வட்டி தருவதாகவும், ஆண்டு முழுவதும் மாதம் ஒரு லட்சம் என 12 லட்சம் கொடுத்தால் 24 லட்சமாக கொடுக்கப்படும் என கூறி பலரை முதலீடு செய்ய வைத்துள்ளார். சிலருக்கு மாதம் 15,000 ரூபாயை நான்கு முதல் 5 மாதங்கள் வரை சமீர் கொடுத்ததாக தெரிகிறது. இதை பார்த்து ஏமாந்து ரூ.1 லட்சம், 2 லட்சம் என கொடுத்தவர்கள் ரூ.5 லட்சம், 10 லட்சமென கொடுக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் தனி நபராக ரூ.70 லட்சம் வரை கொடுத்துள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது.

கோடிக்கணக்கில் பணம் சேர்ந்ததும் ஏஜென்டுகளிடம் கார்களில் செல்வதால் எனக்கு பேக் பெயின் வருவதால் ஹெலிகாப்டர் வாங்குவதற்காக சென்னைக்கு போகிறேன் என்று கூறி சென்றுள்ளார். அங்கு திரைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். உல்லாச வாழ்க்கை அனுபவித்து வந்த இவர் ஆடி, ரோல்ஸ் ராயல்ஸ், மினி கூப்பர், பிஎம்டபிள்யூ, ஜாகுவார், என உயர் ரக கார்கள் மட்டுமின்றி அதிக விலையுள்ள பைக்குகளிலும் சொந்த ஊரில் வலம் வந்ததோடு, வெளிநாடுகளுக்கு விமானத்தில் சுற்றுலா, கப்பலில் சுற்றுலா என தலைமறைவாகவே இருந்து வந்தார். பணம் கொடுத்த பொதுமக்கள் சமீரிடம் தொடர்பு கொண்டு கேட்டால் பணம் இருப்பதை வீடியோவாக எடுத்து சிவாஜி படத்தில் வருவது போல அனுப்பி உள்ளார்.

இந்நிலையில் மூரார்பாளையம் பகுதி ஏஜென்டுகள் சென்னையில் உள்ள தனியார் கார் விற்பனையகத்தில் இருந்த சமீரை நேற்று சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். அப்பகுதியை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்தனர். அவர்களிடம் முக்கிய அரசியல் மற்றும் சினிமா சார்ந்த பிரமுகர்களிடம் பணத்தை கொடுத்து இருப்பதாகவும் அவர்கள் குறித்து வெளியில் சொல்லக்கூடாது எனவும் கூறினார். பெருமளவில் மக்கள் குவிந்ததால் சங்கராபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வநது விசாரணை நடத்தி சமீரை கைது செய்தனர். சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கு திரண்டவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

The post ஆடம்பரத்தில் கோடீஸ்வரர்களை மிஞ்சிய மோசடி மன்னன் பொதுமக்களின் ஆசையை தூண்டி ரூ.150 கோடி சுருட்டிய வாலிபர் கைது: திரைபடம் எடுத்து உயர் ரக கார்களில் உல்லாச உலா appeared first on Dinakaran.

Tags : Shankarapuram ,
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்