×

36 மாதம் கால நிர்ணயம் செய்தும் எய்ம்சை கட்டி முடிக்காதது ஏன்? ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 2019ல் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு விசாரணையின் போது, ‘‘ஒன்றிய அரசு 36 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019, ஜன. 27ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிதற்போது வரை தொடங்கப்படவில்லை.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது ஒன்றிய அரசு தரப்பில் 36 மாதங்களில் மருத்துவமனை பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் கூறப்பட்டது போல் பணிகள் எதுவும் தொடங்காததால், ஒன்றிய அரசின் பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் பி.கே.மிஷ்ரா, ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளர் தருண் பாலாஜி, ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பஸ்வான் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேற்கொள்ள வேண்டும்’’ என மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், புகழேந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு தரப்பில், ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு முடிவு செய்வது இறுதிக்கட்ட நிலையில் உள்ளது.

அதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது, ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக 36 மாதங்கள் கால நிர்ணயம் செய்யப்பட்டும் இன்று வரை கட்டி முடிக்காதது ஏன்’’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஒன்றிய அரசு தரப்பில், ‘‘கொரோனா காலத்தில் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை’’ என கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில், ‘‘எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடங்கப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மனுதாரர் கூறியதை பதிவு செய்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

The post 36 மாதம் கால நிர்ணயம் செய்தும் எய்ம்சை கட்டி முடிக்காதது ஏன்? ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி appeared first on Dinakaran.

Tags : AIIMS ,ICourt ,Union Govt. Madurai ,Madurai ,AIIMS Hospital ,Thopur, Madurai ,Union Government ,Dinakaran ,
× RELATED எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி: நிபுணர் குழு பரிந்துரை