×

சவுதிஅரேபியாவுக்கு செல்லும் செவிலியருக்கு பயண கோப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: செவிலியர் பணிக்கு தேர்ச்சி பெற்ற செவிலியர்களுக்கு சவுதி அரேபியா செல்வதற்கான பயண கோப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் செவிலியர், தாதியர் குழுமம் இணைந்து நடத்திய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, சவுதி அரேபியா அமைச்சகத்தின் செவிலியர் பணிக்கு தேர்ச்சி பெற்ற செவிலியர்களுக்கு சவுதி அரேபியா செல்வதற்காக பயண கோப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கொரோனா நேரத்தில் செவிலியர்கள் ஆற்றிய பங்களிப்பு என்பது போற்றுதலுக்குரியது. குடும்பத்தை விட்டு நாள் முழுவதும் மக்களை காக்க உயிரை பணையம் வைத்து சேவையாற்றியவர்கள் நீங்கள். அதனால், தான் திமுக அரசு செவிலியர்களுக்கு கொரோனா நேரத்தில் ரூ.20 ஆயிரத்தை சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கியது. வெளிநாட்டில் உள்ள உயர்சிறப்பு மருத்துவமனைகளில் பணிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது. செவிலியர் படிப்பை முடித்ததும் நீங்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லலாம்.

குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகளில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இங்கிலாந்து மாதிரியான ஐரோப்பிய நாடுகள் – தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்தியாவில் பயின்ற செவிலியர்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. செவிலியர் பணி என்றாலே பெரும்பாலும் பெண்கள் தான் இருப்பார்கள். எனவே, நீங்கள் வெளிநாடு சென்று நல்ல மருத்துவமனையில் பணியாற்றுகிறபோது, உங்கள் குடும்ப பொருளாதாரமும் உயரும். பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைய முடியும்.

இந்த அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை பொறுத்தவரை, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வெளிநாட்டு வேலைகளை இதுவரை பெற்றுக் கொடுத்துள்ளது. இடைத்தரகர்கள், ஏஜண்டுகளிடம் மாட்டிக்கொண்டு பணத்தை இழக்காதீர்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்ல விண்ணப்பிப்பதில் ஆரம்பித்து, அங்கு தங்குவது, பணிக்கு சேருவது – திரும்பி வருவது என அத்தனை நடைமுறையிலும் தமிழ்நாடு அரசு உங்களுக்கு துணையாக நிற்கும்.

இந்த நேரத்தில் நான் ஒரேயொரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். நீங்கள் வெளிநாடு செல்லுங்கள். கைநிறைய ஊதியம் பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு, நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து இங்கு மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.

The post சவுதிஅரேபியாவுக்கு செல்லும் செவிலியருக்கு பயண கோப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Saudi Arabia ,Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்