×

செங்கம் அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து பெங்களூரு ஐடி ஊழியர் உட்பட ஒரே குடும்பத்தில் 7 பேர் பலி: மேல்மலையனூர் கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்

செங்கம்: மேல்மலையனூர் கோயிலுக்கு சென்று திரும்பியபோது, செங்கம் அருகே லாரி மீது கார் மோதி பெங்களூரு ஐடி ஊழியர் உட்பட ஒரே குடும்பத்தில் 7 பேர் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜ கடையை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40), பெங்களூரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அங்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார். இவரது மனைவி காவியா(35). மகன்கள் சர்வேஷ்வரன்(6), சித்து(3). இவரது மாமானார் சின்னப்பா (60), தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர்.

அவரது மனைவி மலர் (58), மகன்கள் மணிகண்டன் (42), ஹேமந்த் (35). இருவரும் கர்நாடக மாநிலம் தும்கூரில் மெக்கானிக்காக வேலை செய்யததால் பெற்றோர் மற்றும் குடும்பத்துடன் அங்கு தங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மகாளய அமாவாசையையொட்டி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு அனைவரும் காரில் வந்து விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர். காரை மணிகண்டன் ஓட்டி சென்றார். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்று காலை அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

நேற்று காலை 9 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்ரிபாளையம் கிராமம் அருகே புதுச்சேரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது எதிர் திசையில் திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது, கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல நொறுங்கியது. மேலும் காரில் இருந்த சதீஷ்குமார் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். சதீஷ்குமாரின் மனைவி காவியா மட்டும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

தகவலறிந்து செங்கம் போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் வந்து கடப்பாரை மற்றும் சுத்தியல் பயன்படுத்தி காரின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காவியாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 7 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக பெங்களூரு புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன. கார், லாரியை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்குப்பின் 7 பேர் உடல்களும் உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. கோயிலுக்கு சென்று திரும்பியபோது லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தில் 7 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

* குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி – முதல்வர் அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை : திருவண்ணாமலை மாவட்டம் பக்கிரிபாளையம் காந்தி நகர் பகுதி, திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

படுகாயமடைந்து திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post செங்கம் அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து பெங்களூரு ஐடி ஊழியர் உட்பட ஒரே குடும்பத்தில் 7 பேர் பலி: மேல்மலையனூர் கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம் appeared first on Dinakaran.

Tags : Sengam ,Melmalayanur temple ,
× RELATED இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்...