×

குலசை தசரா விழா துவங்கியது

உடன்குடி: இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் கடந்த 14ம் தேதி காலை 11 மணிக்கு காளிபூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டுதல் நடந்தது. நேற்று (15ம் தேதி) கொடியேற்றத்துடன் தசரா திருவிழா துவங்கியது. அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் திருவீதி உலா நடந்தது. 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காலை 8.40 மணிக்கு கொடிபட்டம் கோயிலை வந்தடைந்ததும் கொடிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு காலை 9.21 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ‘ஒம்காளி, ஜெய்காளி’ என கோஷங்கள் முழங்கினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட 16வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பத்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

கொடியேற்றத்தையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 14ம் தேதி நள்ளிரவு முதலே கார், வேன், ஆட்டோ, லாரி, பஸ்களில் குலசேகரன்பட்டினத்தில் குவிந்தனர். இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் வீதி உலா வரும் வைபவம் நடந்தது. 10ம் திருநாளான 24ம் தேதி தசரா திருவிழாவின் சிகரநிகழ்வான மகிஷாசூர சம்ஹாரம் நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பு எழுந்தருளுகிறார்.

தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூர சம்ஹாரம் நடக்கிறது. மறுநாள் அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனை, அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனை முடிந்து திருத்தேரில் பவனி வந்து தேர்நிலையம் வருதல் நடக்கிறது.

The post குலசை தசரா விழா துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Kulasai Dussehra festival ,Ubengudi ,Dussehra ,Mysore ,India ,Kulasekaranpattinam ,Gnanamurtheeswarar Udanurai Mutharamman temple ,Thoothukudi district ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயிலில் தடை மீறி செல்போனில் படம் பிடித்த தமிழிசை