×

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செல்லும்போது மாநிலங்களின் கலாசார ரீதியிலான படிப்பு மாணவர்களுக்கு கிடைப்பதில்லை: கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் பிந்து கருத்து

சென்னை: ‘‘அனைத்து படிப்புகளும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செல்வதால் மாநிலங்களின் கலாசார ரீதியிலான படிப்பு மாணவர்களுக்கு கிடைப்பது தடை செய்யப்படுகிறது’’ என கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் பிந்து தெரிவித்துள்ளார். ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் கல்வி பாதுகாப்பு மாநில மாநாடு நேற்று நடந்தது. இதில் கேரள மாநில உயர்கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் பிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாநாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் பங்கேற்ற பின் கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் பிந்து நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய கல்விக்கொள்கையில் மாணவர்கள் முதலாம் ஆண்டே கல்லூரியைவிட்டு வெளியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்களின் கல்வித்திறனை பாதிக்கும். எனவே, நாங்கள் 3 ஆண்டுகள் கல்லூரியை முடித்த பின்பே மாணவர்கள் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். அனைத்து படிப்புகளும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செல்கிறது. அதனால் மாநிலங்களின் கலாசார ரீதியிலான படிப்பு மாணவர்களுக்கு கிடைப்பது தடை செய்யப்படுகிறது. ஆராய்ச்சி தலைப்புகள்கூட ஒன்றிய அரசின் தேசிய ஆராய்ச்சி மையம் மூலம் முடிவு செய்யப்படுகிறது.

இதனால் சமீபத்தில் பனாரஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் மனுஸ்மிருதியை பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மீண்டும் நம்மை வருணாசிரம காலகட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) டார்வினின் பரிணாம கொள்கை மற்றும் வேதியல் வாய்ப்பாடு உள்ளிட்டவற்றை புறந்தள்ளி இருப்பது மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. நாங்கள் மும்மொழி கொள்கையை எதிர்க்கவில்லை. ஒரு மொழி கொள்கையைத்தான் எதிர்க்கிறோம். சமூக நீதியை பின்பற்றி நாங்களும் ஒரு கல்விக் கொள்கையை வகுத்துள்ளோம். அதன்படி அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என கேரள அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செல்லும்போது மாநிலங்களின் கலாசார ரீதியிலான படிப்பு மாணவர்களுக்கு கிடைப்பதில்லை: கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் பிந்து கருத்து appeared first on Dinakaran.

Tags : Union Government ,Kerala Higher ,Education Minister ,Bindu ,CHENNAI ,Kerala ,Higher Education Minister ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...