×

மபி, சட்டீஸ்கர், தெலங்கானா பேரவை தேர்தல் காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கமல்நாத், பூபேஷ் பாகல் உள்பட மூத்த தலைவர்களுக்கு மீண்டும் ‘சீட்’

புதுடெல்லி: மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களுக்குமான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் மூத்த தலைவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப் பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. மிசோரம், சட்டீஸ்கர் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13ம் தேதி தொடங்கியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. சட்டீஸ்கருக்கு 30 வேட்பாளர்கள் (மொத்த தொகுதி 90), மத்திய பிரதேசத்திற்கு 144 வேட்பாளர்கள் (மொத்த தொகுதி 230), தெலங்கானாவிற்கு 55 வேட்பாளர்கள் (மொத்த தொகுதி 119) கொண்ட முதல் பட்டியல் வெளியானது.

சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல், துணை முதல்வர் டி.எஸ்.சிங் தேவ் ஆகியோருக்கு படான், அம்பிகாபூர் ஆகிய இடங்களில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் தொடர்ந்து 3 முறை ஆட்சியில் இருந்த பாஜக, கடந்த 2018ம் ஆண்டு காங்கிரஸிடம் ஆட்சியை இழந்தது. மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட பேரவையில், இப்போது பாஜகவுக்கு 15 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 68 எம்எல்ஏக்கள் உள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல்கட்டமாக நடக்கும் 20 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மனுக்கள் மீதான பரிசீலனை 21ம் தேதி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 3ம் தேதி 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தெலங்கானா மாநிலத்தின் கொடங்கல் தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிடுகிறார். நிர்மல் தொகுதியில் குச்சடி ஹரி ராவ், உப்பலில் எம்.பரமேஸ்வர ரெட்டி, கோலாப்பூரில் ஜூபாலி கிருஷ்ணரா ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் நவம்பர் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், மத்தியப் பிரதேச முன்னாள் உயர்கல்வி அமைச்சர் ஜிது பட்வாரி, முன்னாள் முதல்வர் திக்விஜய சிங்கின் மகன் ஜெய்வர்தன் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மத்திய பிரதேசத்தில் லஹார் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கோவிந்த் சிங், சாஹேப் சிங் குர்ஜார், சதீஷ் சிகர்வார் ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்திலும் டிச. 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி மேற்கண்ட 3 மாநிலங்களில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில், நாளை இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும், மூன்றாவது மற்றும் இறுதிப் பட்டியல் வரும் 17ம் தேதியும் வெளியாகும் எனத் தெரிகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் 136 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆளும் பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளது. அதேபோல் சட்டீஸ்கரில் 64 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், ராஜஸ்தானில் 41 ெதாகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் பாஜக அறிவித்துள்ளது. தெலங்கானா, மிசோரம் மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

The post மபி, சட்டீஸ்கர், தெலங்கானா பேரவை தேர்தல் காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கமல்நாத், பூபேஷ் பாகல் உள்பட மூத்த தலைவர்களுக்கு மீண்டும் ‘சீட்’ appeared first on Dinakaran.

Tags : Mabi ,Chhattisgarh ,Telangana Council ,Election ,Congress ,Kamal Nath ,Boobesh Bagal ,New Delhi ,Congress Party ,Madhya Pradesh ,Telangana ,Chateeskar ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த...