×

திருச்செங்கோடு திருமலையில் கேதார கௌரி விரதம் நிறைவு விழா

திருச்செங்கோடு, அக்.15: திருச்செங்கோடு திருமலையில் கேதார கௌரி விரதம் நிறைவு விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பார்வதி தேவியார் இறைவனின் இடப்பாகம் வேண்டி திருவண்ணாமலையில் தவமிருக்கும்போது அங்கு தோன்றிய சிவபெருமான் திருச்செங்கோடு சென்று தவம் புரிந்தால், உமையவளின் ஆசையை தீர்த்து வைப்பதாக கூறினார். அதன்படி, பார்வதி தேவியார் திருமலைக்கு எழுந்தருளி விண்ணவரும் -மண்ணவரும் சூழ பல்லியங்கள் முழங்க வெண்சாமிரம், பட்டுக்குடைகள், ஆலவட்டங்கள் அணி செய்ய பூஜைக்கு வேண்டிய கனி வகைகள், நறுமணம் கமழும் சந்தனம்-குங்குமம், திருநீறு, கற்பூரம், திருமஞ்சனப்பொருட்கள் போன்ற அனைத்தும் குவிந்திருக்க லிங்கமூர்த்தியை எழுந்தருளச்செய்து முறைப்படி திருமுழுக்கும்-பூஜையும் செய்து புரட்டாசி மாதம் வளர்பிறை அட்டமதிதியில் கேதார கௌரி விரதத்தை துவங்கி தேய்பிறை சதுர்த்தியன்று நிறைவு செய்தார்.

அன்று சிவபெருமான் காட்சி தந்து உமையவளின் விருப்பம் போல இடப்பாகத்தை அவருக்கு தந்தருளினார். விரதத்தின்போது பார்வதி தேவியார் நீராட விநாயகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட குளம் கணபதி தீர்த்தம் என்ற பெயருடன் இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் கேதார கௌரி விரத நிறைவு விழா திருமலையில் சிறப்பாக கொண்டாடப்படுடுகிறது. நேற்று திருமலையில் இந்த விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கோயில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்துடன் அர்த்தநாரீஸ்வரர் திருமலையில் ஊர்வலமாக வந்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, அறங்காவலர்கள் கார்த்திகேயன், அர்ச்சுனன், அருணா சங்கர், பிரபாகரன், கண்காணிப்பாளர் சுரேஷ், ஆய்வாளர் நவீன்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திருச்செங்கோடு திருமலையில் கேதார கௌரி விரதம் நிறைவு விழா appeared first on Dinakaran.

Tags : Ketara Gauri Vratham ,Thiruchengode Thirumalai ,Tiruchengode ,Thiruchengode Tirumala ,Swami ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்