×

முதல்வர் கல்விக்கு அதிக தொகை செலவழிப்பதை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு அறிவுரை

பெரம்பூர்: கலைஞர் நூற்றாண்டு விழாவில் 46வது நிகிழ்ச்சியாக கொளத்தூர் பெரியார் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘கலைஞர் கண்டது கல்வி புரட்சி, தமிழகம் கண்டது புதிய எழுச்சி’ என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் தலைமை வகித்தார். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு சிறப்பாக தங்களது பேச்சாற்றலை வெளிப்படுத்திய மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, மண்டல குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப் முரளி, நாகராஜன், வழக்கறிஞர்கள் துரைக்கண்ணு‌, சந்துரு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள் என பலர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: யுபிஎஸ்சி தேர்வுக்காக பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர்தான் இங்கு வருகிறோம். உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல்வர் தலைமையிலான அரசு வழங்குகிறது. முதல்வர் கலந்துகொள்ளும் கல்வி சம்பந்தப்பட்ட கூட்டங்களில், உங்களுக்காக நான் இருக்கிறேன். படிப்பிற்கு பிறகு வேலைவாய்ப்பிற்காகவும் நான் இருக்கிறேன் என கூறியுள்ளார். தமிழ்நாட்டு துறைகளிலேயே அதிக தொகை கல்வித்துறைக்கு தான் ஒதுக்குகிறார் முதல்வர். எனவே மாணவ, மாணவிகள் அதை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post முதல்வர் கல்விக்கு அதிக தொகை செலவழிப்பதை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,Shekharbabu ,Perambur ,Periyar Nagar ,Kolathur ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...