×

ஜமீன் பல்லாவரம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: வருவாய்த்துறை நடவடிக்கை

பல்லாவரம்: ஜமீன் பல்லாவரம், பாரதி நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான மலை புறம்போக்கு நிலம் மூன்று ஏக்கர் உள்ளது. அவற்றை ஆக்கிரமித்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் வீடு மற்றும் கடைகளை கட்டி இருந்தனர். அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும் 30 குடியிருப்புகளை உடனடியாக அகற்றி, அந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய கோரி நோட்டீஸ் ஒட்டும் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, 5 வீடுகளின் சுற்று சுவர்களும் இடிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு போதிய அவகாசம் வேண்டும் என்று அங்கு வசித்தவர்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், 2 மாதம் கழித்து மீண்டும் 2வது முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார். அதன்பேரில் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 7 வீடுகள் மற்றும் சுற்றுச் சுவர்களை இடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஒருசில குடியிருப்புவாசிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல்லாவரம் போலீசார் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேபோன்று இதே பகுதியில் சாமியார் நித்தியானந்தாவின் சீடர்கள் வசமிருந்த சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் அரசு நிலமும் கடந்த மாதம் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி, இதுபோன்று அகற்றப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post ஜமீன் பல்லாவரம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: வருவாய்த்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Zameen Pallavaram ,Pallavaram ,Bharati Nagar ,Dinakaran ,
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை