×

ஒன்றிய அரசு ஆய்வு கண்துடைப்பு அதானி குழுமத்திற்கு 6 ஏர்போர்ட் வழங்கியது எப்படி?: காங்கிரஸ் சரமாரி கேள்வி

புதுடெல்லி: அதானி குழுமத்துக்கு சொந்தமான இரண்டு விமான நிலையங்களில் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் நடத்திய ஆய்வானது வெறும் கண்துடைப்பு. அதானி குழுமத்திற்கு 6 ஏா்போர்ட் வழங்கியது எப்படி என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தது. இதை தொடர்ந்து அதானி குழுமத்துக்கு சொந்தமான மும்பையில் உள்ள 2 விமான நிலையங்களின் கணக்குகள் குறித்து கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதனை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில்,’தினந்தோறும் அதானி குழுமத்தின் மீது புகார்கள் எழுந்து வருவதால், பிரதமர் மோடியின் விருப்பமான வணிகக் குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் காட்டுவதற்காக அரசு சார்பில் சோதனை நடத்தியுள்ளது. நிதி ஆயோக் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறையின் ஆட்சேபனையும் மீறி அதானி குழுமத்திற்கு 6 விமான நிலையங்கள் எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை அரசு எப்போது விசாரிக்கும்?.

அதானி குழுமத்திற்கு விற்க விரும்பாத மும்பை விமான நிலையத்தின் முந்தைய உரிமையாளர்களை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ எவ்வாறு சோதனையிட்டது என்பதையும், பிரதமரின் சிறந்த நண்பர் இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பிறகு, எப்படி இந்த வழக்கு முடக்கப்பட்டது என்பதையும் எப்போது விசாரிக்கும்? இந்த போலி விசாரணை அதானி குழுமத்தின் முந்தைய மோடி கால விசாரணைகள் எங்கு சென்றதோ அங்கேயே முடிவடையும். மொதானி மெகா ஊழலின் பின்னணியில் உள்ள உண்மையை ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு மட்டுமே வெளிப்படுத்த முடியும். கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் நடத்திய விசாரணையானது வெறும் கண்துடைப்பு மற்றும் போலியானது. ஒன்றிய அரசு தன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஒன்றிய அரசு ஆய்வு கண்துடைப்பு அதானி குழுமத்திற்கு 6 ஏர்போர்ட் வழங்கியது எப்படி?: காங்கிரஸ் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Adani Group ,Congress ,New Delhi ,Ministry of Corporate Affairs ,Union government ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்...