×

அனுமதி பெறாமல் இயங்கிய பொருட்காட்சிக்கு சீல்

கூடுவாஞ்சேரி, அக்.15: செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையோரத்தில் நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இதன் எதிரே தனியார் நிறுவனம் சார்பில், பொழுதுபோக்கு பொருட்காட்சி அமைக்கப்பட்டது. கடந்த மாதம் 28ம் தேதி முதல் இம்மாதம் 6ம் தேதி வரை மட்டுமே இதற்கு கலெக்டர் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதில் தனியார் பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு மட்டும் இலவசம். மற்றவர்களுக்கு தலா ₹40 வசூலிக்கப்பட்டு வந்தது. மாலை நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் பொருட்காட்சியை காண குவியத் தொடங்கினர்.

இந்நிலையில், அனுமதி பெறாமல் பொருட்காட்சி இயங்கி வருவதாக கலெக்டர் ராகுல்நாத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேற்படி பொருட்காட்சிக்கு சீல் வைக்கும்படி நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் நேற்று மாலை அதிரடியாக உத்தரவிட்டார். அதன்பேரில் நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் துரைமுருகன், நகரமைப்பு ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று, பொருட்காட்சியில் இருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் வெளியேற்றினர். பின்னர் அதற்கு சீல் வைத்தனர். இதில் ₹40 கட்டணம் செலுத்தி டோக்கன் வாங்கியவர்கள் பொருட்காட்சிைய கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதில் பலர் கட்டிய பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூடுவாஞ்சேரியில் நேற்று மாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post அனுமதி பெறாமல் இயங்கிய பொருட்காட்சிக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Nandivaram Government Boys Higher Secondary School ,Guduvancheri-Nellikuppam road ,Chengalpattu District ,Dinakaran ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...