×

உத்தரபிரதேசத்தில் நடந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வில் மோசடி: சிவகங்கை பயிற்சி மையத்தில் 2 பேர் சிக்கினர்

சிவகங்கை: உத்தரபிரதேசத்தில் நடந்த இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை தேர்வில் மோசடியில் ஈடுபட்ட இருவர், சிவகங்கையை அடுத்துள்ள பயிற்சி மையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினர். சிவகங்கை அருகே இலுப்பைகுடியில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் வீரர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று பணி நியமனம் பெறுவர். இந்த பயிற்சி மையத்தில் கடந்த மாதம் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி தொடங்கியுள்ளது. இதன்படி, உத்திரபிரதேச மாநிலம், தனீனாஜக்னேர் என்ற ஊரைச் சேர்ந்த அஜய்சிங்(24) என்பவர், கடந்த செப்.30ம் தேதி பயிற்சியில் சேர்ந்தார்.

இவரை தொடர்ந்து கடந்த 9ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் நக்லாகோகுல் என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தீப்யாதவ்(27) என்பவர் பயிற்சியில் சேர வந்தார். அதிகாரிகள் ரோல் நம்பரை சரிபார்த்தபோது அஜய்சிங் மற்றும் சந்தீப்யாதவ் ஆகிய இருவருக்கும் ஒரே ரோல் நம்பர் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மைய அதிகாரிகள் விசாரித்தபோது, இரண்டு பேரும் அஜய்குமார் என்பவர் பெயரில் தேர்வு எழுதி வெற்றி பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை கமாண்டர் ரன்வீர் ராணா பூவந்தி போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடைபெற்ற இடம் உத்தரப்பிரதேச மாநிலம் என்பதால், இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுக்க அங்குள்ள அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

The post உத்தரபிரதேசத்தில் நடந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வில் மோசடி: சிவகங்கை பயிற்சி மையத்தில் 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Border Security Force ,Uttar Pradesh ,Sivagangai training centre ,Sivagangai ,Indo- ,Tibet ,Sivagangai training center ,Dinakaran ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...