×

குலசை தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி: குலசை தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுறுத்தியுள்ளார். போலீஸ் மற்றும் போலீஸ் சார்ந்த சீருடை போன்ற வேடங்கள் அணிய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. சாதிய அடையாளங்களுடன் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நாளை (15ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் சிகரமான மகிஷாசூர சம்ஹாரம் 24ம் தேதி நள்ளிரவு நடக்கிறது. மைசூர் தசரா விழாவிற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும்.

இக்கோயிலில் அன்னை முத்தாரம்மன், சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் சமேதராய் அம்மையும் அப்பனுமாக ஒருசேர வீற்றிருப்பர். இந்தாண்டுக்கான தசரா திருவிழா நாளை (15ம்தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி இன்று 14ம்தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.

15ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வீதியுலா நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு கொடியேற்றமும், கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகமும் தொடர்ந்து திருக்காப்பு அணிவித்தல், இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 9ம் நாள் திருவிழா வரை பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

10ம்நாளான 24ம்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக எழுந்தருளலும், தொடர்ந்து மகிஷாசூர சம்ஹாரமும் நடைபெறுகிறது. 11ம் நாளான 25ம் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் நிறைவடைந்ததும் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளலும், அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு அம்மன், சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளலும் சாந்தாபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடக்கிறது.

அதிகாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிதம்பரேஸ்வரர் கோயில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து திருத்தேரில் எழுந்தருளும் அம்மன் பவனியாக நிலையம் வந்தடைந்ததும் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை எழுந்தருளல் மற்றும் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.

12ம் நாளான 26ம் தேதி காலை 6, 8, 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலிப்பார். இதையடுத்து சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவையொட்டி நிறைய பக்தர்கள் பல்வேறு வேடம் அணிவர். அவர்கள் காப்பு கட்டிய பிறகே வேடம் அணிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குலசை தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுறுத்தியுள்ளார். போலீஸ் மற்றும் போலீஸ் சார்ந்த சீருடை போன்ற வேடங்கள் அணிய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. சாதிய அடையாளங்களுடன் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post குலசை தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் appeared first on Dinakaran.

Tags : Kulasai Dussehra festival ,Tuticorin District ,Superintendent of Police ,Tuticorin ,Kulasai Dussehra festival Balaji ,
× RELATED சர்வோம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு...