×

ஸ்டெர்லைட் ஆலையிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் சுகாதாரத்துறை அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருச்சி: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தர லஞ்சம் பெற்ற வழக்கில் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநருக்கு 7 ஆண்டு தண்டனை விதித்து திருச்சி கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் நடந்த விபத்தால் அந்நிறுவனம் மூடப்பட்டது. இந்நிலையில் அந்நிறுவனத்தை மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும் என ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் அப்போதைய சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளரும், பதவிநிலை இயக்குநருமான இளங்கோவனிடம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு லஞ்சமாக ரூ.5லட்சம் தரவேண்டும் என ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் கேட்டுள்ளார்.

இதையடுத்து கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம்தேதி திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இளங்கோவன் தங்கியிருந்தபோது அவர் கேட்ட லஞ்சபணத்தில் முதல் தவணை தொகையாக ரூ.2 லட்சத்தை ஸ்டெர்லைட் நிறுவன மேலாளர்கள் சற்குணன், ஜோசப்பிரீஸ் ஆகியோர் கொடுத்தனர். இந்த தகவல் தெரிய வந்த அப்போதைய திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையிலான போலீசார் இளங்கோவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக இளங்கோவனுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.20,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்தார். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து இளங்கோவன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் சுரேஷ்குமார் ஆஜரானார்.

The post ஸ்டெர்லைட் ஆலையிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் சுகாதாரத்துறை அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Sterlite ,Trichy ,Health Department ,
× RELATED தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை...