×

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் தாக்கல் எடப்பாடி பழனிசாமியின் எம்எல்ஏ பதவியை பறிக்கக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: அதிமுக எம்எல்ஏவும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை தகுதி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கோவாரண்டோ வழக்கு தொடர்ந்துள்ளார். பழனி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலாளருமான ஏ.சுப்புரத்தினம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 2021ல் நடந்த தேர்தலில் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். வேட்பு மனுவில் தனது மனைவி ராதாவின் சொத்து கணக்குகளை தாக்கல் செய்யவில்லை.

அவரது மனைவி பங்குதாரராக இருந்த பாலாஜி புளூ மெட்டல் நிறுவனத்தின் மூலம் அவருக்கு ரூ.69 லட்சத்து 36,333 வருமானம் வந்துள்ளது. அதை மறைத்துவிட்டார்.  அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமிக்கு நெடுங்குளம் கிராமத்தில் பல்வேறு சர்வே எண்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த தேர்தலில் அவர் தனது வேட்புமனுவில் தனக்கு 13 நிலங்கள்தான் உள்ளன என்று தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்கு சொந்தமான மேலும் 6 நிலங்கள் குறித்த தகவல்களை வேட்புமனுவில் மறைத்துவிட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் மனைவி ஹரிஷ் கிருபா, பாலாஜி புளூ மெட்டல் என்ற இரு நிறுவனங்களில் பங்குதாரராக இருந்ததையும் அதன் மூலம் கிடைத்த வருமானத்தையும் வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை. அவர் தான் படித்த இளநிலை படிப்பில் (முடிக்கவில்லை) எந்த பிரிவில் படித்தார் என்பதையும் வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை. அவரது மனைவியின் பெயரில் எடப்பாடி தாலுகா சின்ன மணலி கிராமத்தில் 4200 சதுர அடி நிலமும், சேலம் தெற்கு தாலுகா தடாகபட்டி கிராமத்தில் 560 சதுர அடி நிலமும் உள்ளன. இதன் சந்தை மதிப்பை சரியாக தெரிவிக்கவில்லை.

அவரது மனைவிக்கு சொந்தமாக ரூ.2 கோடியே 90 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு நெடுங்குளம் கிராமத்தில் 7 ஹெக்டேர் நிலம் உள்ளது. அதன் சந்தை மதிப்பை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை. கடந்த 2016-17 முதல் 2018-19வரை அவரது வருமானத்தை வேட்புமனுவில் தவறாக குறிப்பிட்டுள்ளார். அவரது வேட்புமனுவை உரிய முறையில் ஆய்வு செய்யாமல் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. வேட்புமனுவில் தவறான தகவல்களை தந்ததன் மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளார்.

சேலம் மாநகர போலீஸ் எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 2021ல் பதிவு செய்து சேலம் 1வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் வேட்பு மனுவில் அவர் குறிப்பிடவில்லை. அதை உரிய முறையில் பரிசீலனை செய்யாமல் அவரை தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. எனவே, எந்த தகுதியின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏவாக பதவி வகிக்கிறார் என்று விளக்கம் கேட்குமாறு உத்தரவிட வேண்டும். எடப்பாடி பழனிசாமியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் எம்எல்ஏவாக இருந்த நாட்களில் அவர் பெற்ற சம்பளம் மற்றும் அலவன்ஸ் ஆகியவற்றை திரும்ப வசூலிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

The post அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் தாக்கல் எடப்பாடி பழனிசாமியின் எம்எல்ஏ பதவியை பறிக்கக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Supreme ,MLA ,Edabadi Pannisamy ,iCourt ,Supreme Court of Chennai High Court ,Supreme MLA ,Edabadi Palanisami ,Edapadi Pannisami ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை...