×

வாலாஜாபாத்தில் ரூ.2.75 கோடியில் அவளூர் தரைப்பாலம் சீரமைப்பு: எம்பி, எம்எல்ஏ திறந்தனர்

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் இருந்து அவளூர் செல்லும் தரைப்பாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் அடித்து செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரூ.2.75 கோடி மதிப்பில் அவளூர் தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு, நேற்று மக்களின் பயன்பாட்டுக்கு க.சுந்தர் எம்எல்ஏ, க.செல்வம் எம்பி ஆகியோர் திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் இருந்து அவளூர் வரை செல்லும் தரைப்பாலம், பாலாற்று படுகையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் வழியாக நாள்தோறும் அவளூர், ஆசூர், கென்னடியன் குடிசை, தம்மனூர், அங்கம்பாக்கம் உள்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து, இங்கிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம், தாம்பரம் உள்ளிட்ட நகர்ப் பகுதிகளுக்கு பல்வேறு பணிகளுக்கு சென்று வந்தனர்.

இதனால் இப்பாலம் 24 மணி நேரம் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். இதற்கிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால், வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலத்தின் ஒருசில பகுதிகள் அடித்து செல்லப்பட்டன. இதனால் இப்பகுதி மக்கள் போக்குவரத்து இன்றி பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதையடுத்து, வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலத்தை மீண்டும் சீரமைத்து தரவேண்டும் என்று தமிழக அரசிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, ரூ.2.75 கோடி மதிப்பில் வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலம் சீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிந்தன.

இந்நிலையில், நேற்று மாலை வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம் ஆகியோர் பங்கேற்று, ரூ.2.75 கோடியில் சீரமைக்கப்பட்ட வாலாஜாபாத்-அவளூர் தரைப்பாலத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தனர். இதில் ஒன்றியக்குழு தலைவர்கள் தேவேந்திரன், மலர்க்கொடி குமார், ஒன்றியக்குழு துணை தலைவர்கள் சேகர், திவ்யப்ரியா இளமதி, பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதர், துணை தலைவர் சுரேஷ்குமார், பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் குமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வாலாஜாபாத்தில் ரூ.2.75 கோடியில் அவளூர் தரைப்பாலம் சீரமைப்பு: எம்பி, எம்எல்ஏ திறந்தனர் appeared first on Dinakaran.

Tags : Aalur ,Walajabad ,MLA ,Wallajabad ,Alur ,Alur Causeway Bridge ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...