×

முத்துக்கள் முப்பது-சகல நலன்களையும் அருளும் நவராத்திரி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நவராத்திரி – 15.10.2023 முதல் 23.10.2023 வரை

நவராத்திரி நடக்கும் கொண்டாடும் இந்த வேலையில் நவ நவங்கள் (புதிது புதிதான) என நன்மைகளை அள்ளித் தரும் “நவராத்திரி தேவியர்” குறித்து முப்பது முத்துக்களைக்
காண்போம்.

1) நவராத்திரி சிறப்பு

நவராத்திரி வந்துவிட்டது. மகாலய அமாவாசை முடிந்ததும் நவராத்திரி தொடங்குகிறது. பிதுர் பூஜை முடிந்த கையோடு தேவபூஜை தொடங்குகிறது. நவராத்திரி என்ற சொல் அற்புதமானது. அதில் உள்ள ராத்திரி என்ற சொல் இரவு காலத்தைக் குறிக்கிறது. மனிதர்களுக்கு பகல் காலம் போலவே இரவுக் காலம் மிக முக்கியம். தட்சிணாயணம் என்றால் இரவு. இது தட்சிணாயணத்தின் கொண்டாடப்படும் பண்டிகை. அடுத்து இரவில் கொண்டாடப்படும் பண்டிகை. புதுமையான பலன் தரும் பண்டிகை. ஒன்பது நாள் இரவுக் காலம் கொண்டாடும் பண்டிகை. இவையெல்லாம் நவராத்திரியின் சிறப்பு அம்சங்கள்.

2) பெண்மையைப் போற்றும் பண்டிகை

சில பண்டிகைகள் ஒரு குறிப்பிட்டபகுதியில் மட்டுமே பிரசித்தமாக இருக்கும். சில பண்டிகைகள் நாடு முழுவதும் பிரசித்தமாகக் கொண்டாடப்படும். நவராத்திரி பண்டிகை இந்தியாவில், அனேகமாக எல்லா மாநிலங்களிலும் விரிவாகக் கொண்டாடப்படும் பண்டிகை. பெண்மையை சக்தியாகக் கொண்டாடும் நமது சமய மரபு, சிவராத்திரியை ஒரு நாளைக்கு வைத்துவிட்டு, நவராத்திரியைஒன்பது நாள்களுக்கு என்று வைத்து வணங்கிப் போற்றிய தத்துவத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கல்வியின் பெருமைகளையும், கலைகளின் பெருமைகளையும், குணத்தின் சிறப்பையும், ஞானத்தின் அருமையையும் பேசும் பண்டிகை இது.

மற்ற உயிரினங்களால் நம்மைவிட வேகமாக ஓடமுடியும்; நம்மைவிட வலிமையானவையாக அவை இருக்கின்றன; நம்மால் முடியாத பலவற்றையும் அவை செய்கின்றன ஆனால், நம்மால் கற்க முடிந்த அளவுக்கு அவற்றால் கற்றுக் கொள்ள முடியாது. மனிதனாக இருப்பதன் பெருமையே விருப்பம் இருந்தால் எதை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள முடியும் என்பதுதான். அதுதான் சாரதா நவராத்திரியின் சிறப்பு.

3) மனித குலத்தின் மகத்தான ஆற்றலை உணர்த்தும் பண்டிகை

இந்த உலகம், அண்டாதி அண்டங்கள் எல்லாம் இணைத்து சக்தியால் உருவானது. அண்டங்களை இயக்குவது இந்த பிரபஞ்ச சக்தி (Power of Universe). எல்லாவற்றையும் இயக்குவது மட்டுமல்ல எல்லாவற்றையும் தருவதும் இந்த பிரபஞ்ச சக்திதான். இதை உணர்ந்து கொண்டாடினால், நவராத்திரியின் விசேஷமான பலனை, நம் மனிதகுலம் முழுமையாகப் பெறும். மனித குலத்தின் மகத்தான ஆற்றலை உணர்த்தும் பண்டிகைதான் நவராத்திரி.

இதில் முப்பெரும் தேவியர்களை (வீரம், செல்வம், ஞானம்) வணங்குகின்றோம். முப்பெரும் ஆற்றலும் இணைந்தால் கிடைக்கும் மகத்தான வெற்றியின் குறியீடாக தசமி அன்று “விஜயதசமி” விழாவை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஒரு மனிதனாக உருவாவதில் முக்கியமான அம்சம், அந்த மனிதன் ஒரு உயிராக, மலரவேண்டும். இந்த ஒன்பது நாட்களும் படிப்படியாக மலர்வதை குறித்ததாகவே (progressive) இருக்கிறது, பத்தாவது நாளான விஜயதசமி. பூரணமாக மலர்ந்து வெற்றியடைந்து விட்டதைக் குறிக்கிறது. இனி ஒவ்வொரு தேவியின் சிறப்பையும் தத்துவத்தையும் சிந்திப்போம்.

I. பராசக்தி

4) துக்க நிவாரணி காமாட்சி

முதல் மூன்று நாள்கள் மலைமகளான பராசக்திக்கு உரிய நாள்கள் ஆகும்.

`மங்கள ரூபிணி மதி அணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் களிமுகம் கொண்டநல் கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி’

துக்க நிவாரணி என்ற வார்த்தையை துர்க்கையின் பேரருளாகச் சொல்வார்கள். அச்சம் துன்பத்தைத் தரும். கவலையைத் தரும். ஆற்றலைக் குறைக்கும். அமைதியை சிதைக்கும். ஆனால், ஒடிந்த மனதை நிமிர்த்தி கம்பீரமாகச் செயல்பட வைக்கும் சக்தியைத் தருபவள் துர்காதேவி. ஆற்றலின் மொத்த வடிவமான சக்தியை முதல் மூன்று நாட்கள் மனதில் தியானித்து வணங்க வேண்டும்.

5) காலம் காலமாக இருக்கும் வழிபாடு

துர்க்கை வழிபாடு என்பது காலம் காலமாக இருப்பது. சங்க இலக்கிய காலத்திலிருந்து பின்பற்றப்படும் வழிபாடு. கொற்றவை வழிபாடு என்பது பாலை நிறத்திற்கு உரியது.

`மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”
(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

கொற்றவை அல்லது காளி என்று பல பெயர்கள் இந்த தெய்வத்திற்கு உண்டு. அதில் ஒரு பெயர் ஸ்கந்த மாதா. முருகனுக்கு தாய். முருகன் சூரசம்காரம் செய்த போது வேல் தந்தவள் அல்லவா. எனவே கூர்மையான மதியும் எதிரிகளை வெல்லும் (பகையை வெல்லும்) ஆற்றலையும் பெற, துர்க்கையின் அருள் வேண்டும்.

6) அம்மன் வழிபாட்டில் ஆர்வம்

நாடெங்கும் துர்க்கைக்கு ஆலயங்கள் உண்டு. சக்தி வழிபாட்டை அறுசமய வழிபாட்டில் ஒன்றாக வைத்தார்கள். சாக்த வழிபாடு என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டை ஆயிரக்கணக்கான மக்கள், மற்ற வழிபாட்டைவிட அதீத ஆர்வத்துடன் செய்கிறார்கள். அம்மன் வழிபாட்டில் ஆர்வம் இல்லாதவர்கள் யார்? அது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், துணிச்சலையும், செயலாற்றலையும் தருகிறது. தட்சிணாயணத்தின் முதல் மாதமான ஆடி மாதம் முழுவதுமே அம்மன் வழிபாட்டிற்கு என்றே ஒதுக்கி வைத்தார்கள்.

7) இல்லாததை இருப்பதாக மாற்றும்

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு அதாவது சக்தி வழிபாடு. அது என்ன ராத்திரி வழிபாடு? பொதுவாகவே “ராத்திரி” என்பது இருட்டைக் குறிக்கும். இருள் என்பது புத்தியின் மயக்க நிலையைக் குறிக்கும். ‘‘நெஞ்சகம் இருளானால் வஞ்சக எண்ணங்கள் தானே தோன்றும்’’ என்பார்கள். இருட்டு என்பது அஞ்ஞானத்தைக் குறிப்பது. இந்த அஞ்ஞானம் என்பது தனியான ஒரு பொருளோ, தத்துவமோ அல்ல. ஒளி இன்மை, அறிவின் மையின் பிரதிபலிப்புதான் அஞ்ஞானம். இருப்பது என்பது ஒளி. இல்லாதது என்பது இருள். இல்லாததை இருப்பதாக மாற்றுவதற்குத் தான் நவராத்திரி வழிபாடு. இதில் சக்தியின் ஆற்றலை (ஒளியை) வணங்குகின்றோம். ஆற்றலைப் பெறுகின்றோம்.

8) மகிஷாசுர மர்த்தனி

“மகிஷாசுர மர்த்தனி” என்று துர்க்கையைக் கொண்டாடுகிறோம். `மகிஷம்’ என்றால் எருமை. எருமை தலையோடு கூடிய அசுரனை, சிங்க வாகனம் ஏறி அழித்தவள் பராசக்தி. இது புராணக் கதையாக இருப்பினும் இதன் தத்துவ சிறப்பு அபாரமானது. எருமையின் நிறம் கருப்பு. (ராத்திரி) எருமையின் குணம் தாமசம் (தமஸ்). மனிதர்களிடம் தெளிவின்மையாகிய இருட்டும் தமஸ் குணமும் மிஞ்சி நிற்கும் போது அவன் ஆற்றல் நேர் வழியில் செல்லாது.

துர்குணங்களே மிகும். தமஸ் குணம், ஒரு மனிதனிடம் அமைந்துள்ள குணங்களான காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை செய்தல், இரத்தல், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை உணர்வு, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்குக் கேடு விளைவிக்கும் செயல்கள் செய்தல், பகட்டுக்காகச் செய்யப்படும் செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கும். தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது.

தமோ குணப் பெருக்கினால் இராட்சசத் தன்மையும், மோகமும் அதிகரிக்கின்றது. தமோ குணத்தினால் உறக்கநிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது. அது அவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் துயரத்தைத் தரும். இந்த குணத்தைத் தானே போக்கிக் கொள்ள முடியாது. அதை அழிக்க (மர்த்தனம்) வேண்டும். நவராத்ரி முதல் மூன்று நாள் வழிபாட்டில் அசுர குணங்களாகிய இருட்டையும், தமஸ் எனும் குணத்தையும் முற்றிலும் நீங்க பிரார்த்திக்கிறோம்.

9) அசுரர் யார்?

புராணக் கதைகளில் ஏதோ அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தாள் தேவி என்று படிக்கிறோம். அசுரர்களும் தேவர்களும் தனித்தனி இனம் என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையான தத்துவம் அதுவல்ல. சாத்வீகம் என்பதும், நற்குணங்கள் என்பதும், ஆக்கபூர்வமான அறிவு என்பதும், தெளிவு (வெளிச்சம்) என்பதும் தேவர் குணம் எனப்படும். இந்த குணங்களும் தெளிவும் இல்லாத நிலை அசுரர் குறியீடு. இந்திரனே ஆனாலும், அசுர குணம் வரும்போது அவன் துன்பப் படுகிறான். அசுரனே ஆனாலும் தேவகுணம் தலையெடுக்கும் போது அவன் இன்பத்தை அடைகிறான். எனவே, குணங்களின் வளர்ச்சிக்கும் ஆக்கபூர்வமான சக்திக்கும் துர்கையை வணங்குகிறோம்.

10) ராகு காலத்தில் துர்க்கை

பொதுவாக ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களை நிழல் அல்லது இருள் கிரகங்கள் என்பார்கள். ஒன்று தலை இன்னொன்று வால். ஒளியாகிய சூரியனையும் சந்திரனையும் விழுங்கும் வல்லமை பெற்றவை இந்த கிரகங்கள். எனவேதான் இவர்களால் சூரிய சந்திர ஒளி மங்குவதை “கிரகணம்” என்கிறோம். இந்த கிரகணம் நல்லறிவை செயல்படாது முடக்கும். இந்த முடக்கத்தை நீக்குவதுதான் துர்க்கை வழிபாடு. ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது சிறப்பு.

11) வடக்கு வாசல் துர்க்கை

பெரும்பாலான ஆலயங்களில் வடக்கு பிராகாரத்தில் வடக்கு நோக்கி துர்க்கை சந்நதி இருக்கும். வைணவ ஆலயங்களிலும் துர்க்கை சில இடங்களில் உண்டு. துர்க்கையை கண்ணனின் சகோதரியாக சித்தரிக்கிறது நமது புராணங்கள். வடக்கு நோக்கிய துர்க்கை சந்நதிகள் இருப்பதால் வடக்கு வாசல் செல்வி என்று சொல்வார்கள். பராசக்தி என்றும் அவளுக்குப் பெயர். காளிதாசன், சியாமளா என்ற பெயரில் அழைக்கிறான்.

காளிதாசன் முதல் முதலில் இயற்றிய நூல் `சியாமளா தண்டகம்’. கேரள தேசத்தில் அவள் பகவதி என்று அழைக்கப்படுகிறாள். மகிமை நிறைந்த அவளை கிராமப்புற எளிய மக்கள் மகமாயி என்று அழைக்கின்றனர். எல்லா தாவரங்களையும் காப்பதால் சாகம்பரி என்றும் பெயர். நவராத்திரியில் துர்க்கையின் பேராற்றலைப் பெற வேண்டும் என்பதற்காக மகா சண்டி ஹோமம் விசேஷமாக நடத்துவார்கள்.

பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது. துர்கா ஹோமத்தில், ஸ்ரீ மகா சண்டி ஹோமம் இடம்பெறுகிறது.

II. மஹாலட்சுமி

12) சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி அள்ளித் தருபவள்

நவராத்திரியின் அடுத்த மூன்று நாள்கள் திருமகளுக்கு உரியது. மகாலட்சுமியை அலைமகள் என்று அழைக்கிறோம். பாற் கடலில் அவதரித்த தேவி மகாலட்சுமி. பாற்கடலைக் கடைந்தபோது பல்வேறு பொருட்கள் தோன்றின. அவைகளில் பலவற்றை தேவர்கள் எடுத்துக் கொண்டனர். அந்த பாற்கடலில் இருந்து மகாலட்சுமியும் அவதரித்தாள். அவள் உதித்த நாள் பங்குனி உத்திரத்
திருநாள்.

`லஷ்மீம் ஷீர ராஜ சமுத்திர தனயாம் ரங்க தாமேஸ்வரீம்
தாசி பூத சமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீமன் மந்த கடாக்ஷ லப்த பிரமேந்திர கங்காதராம்
த்வாம் திரை லோக்ய குடும்பினிம் சரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம்’

– என்ற ஸ்லோகம் இதை விவரிக்கும்.

நவராத்திரியின் இரண்டாம் மூன்று நாட்கள் செய்யும் பூஜைகள் அஷ்ட லட்சுமியின் அருளைக் குறித்துச் செய்யப்படுகின்றது. வீரத்தையும் வெற்றியையும் விரும்பிய நமக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி அள்ளித் தருபவள் அல்லவா மகாலட்சுமி!

13) மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்

பண்டிகையின் மகிழ்ச்சி என்பது குணங்களின் மகத்துவங்களைச் செழுமையாக்குவது. ஒவ்வொரு பண்டிகையின் முடிவிலும் நம்முடைய ஆத்மார்த்தமான குணம் அதிகரித்து இருக்க வேண்டும். அதுதான் பக்தியின் விசேஷம். மகாலட்சுமியின் திருவருள் பெற வேண்டும் என்றால், நல்ல குணங்களும் பரோபகார சிந்தனையும் மனதில் அழுத்தமாக இருக்க வேண்டும். ஒருமுறை சுகப்பிரம்ம மகரிஷி மகா விஷ்ணுவைச் சந்தித்த போது பக்கத்தில் இருந்த மகா லட்சுமியிடம் ஒரு கேள்வி கேட்டார்.

‘‘அம்மா நீ யாரிடத்தில் பிரியமாக வசிப்பாய்?’’ என்ற அவர் கேள்விக்கு மகாலட்சுமி சிரித்தபடி பதில் தந்தாள். ‘‘இனிமையான பேச்சும், சாந்தமும், பணிவும், கிடைத்ததை பகிர்ந்து கொள்ளும் குணமும், பிறரை மதிக்கும் பண்பும், மனம் மொழி மெய்களில் தூய்மையும் யாரிடத்தில் உண்டோ, அவர்களிடத்தில் நான் நிரந்தரமாக இருப்பேன்’’ என்றாள். இந்த நற்குணங்கள் நவராத்திரி பூஜையின் போது ஓங்க வேண்டும். நற்குணங்கள் நிலைத்திருக்க பிரார்த்திக்க வேண்டும். “எண்ணம் போல் தானே வாழ்வு’’ என்பதை மறக்கக்கூடாது.

14) மாதுளம் பழம்

மகாலட்சுமிக்கு மாதுளம்பழம் பிடித்தமானது. நவராத்திரியில் இதனை நாம் விசேஷமாக நிவேதனம் செய்ய வேண்டும். இதற்குப் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. பத்மாட்சன் என்ற அரசன் தவமிருந்தான். மகாவிஷ்ணு அவன் முன்தோன்றி, ‘‘என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டார். ‘‘மகாலட்சுமியே குழந்தையாகப் பிறக்க வேண்டும்’’ என்று வரம் வேண்ட, மகாவிஷ்ணு ‘‘உன் எண்ணம் நிறைவேறும். இந்த மாதுளம் பழத்தைக் கொண்டு போய் உன் பூஜை அறையில் வைத்துக் கொள்’’ என்றார்.

மன்னனும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு பூஜை அறையில் வைத்து தினசரி பூஜை செய்தான். அது நாளுக்கு நாள் பெரிதானது. இதை அதிசயத்தோடு பார்த்தான் மன்னன். ஒருநாள் அது இரண்டாகப் பிளந்தது அதில் ஒரு பக்கம் அழகான முத்துக்களும் ஒரு பக்கம் அற்புதமான பெண் குழந்தையும் இருக்க அதிசயத்தோடு அந்தக் குழந்தையை எடுத்தான். தாமரை மலர் போல் சிரித்த முகத்துடன் இருந்த அந்த பெண் குழந்தைக்கு பத்மை என்று பெயரிட்டான். இந்தக் கதையின் அடைப்படையில் மாதுளம் பழம் நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

தான்யம் தனம் பஶும் பஹுபுத்ரலாபம்
ஸதஸம் வத்ஸரம் தீர்கமாயு:

என்ற மந்திரத்தை சொல்லித் துதிக்க, எல்லா செல்வங்களையும், தீர்க்கமான ஆயுளையும் கொடுப்பாள்.

15) என்னென்ன மலர்கள்?பட்சணங்கள்?

மகாலட்சுமிக்கு பிடித்த மலர்களையும் நிவேதனங்களையும் பற்றி பல்வேறு நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. மகாலட்சுமிக்கு பிடித்த தாமரைப் பூ, மல்லி பூ, மரிக் கொழுந்து, பன்னீர் ரோஜா, இப்படி நமக்கு எந்த பூ கிடைத்தாலும் அதை வைத்து வழிபாடு செய்யலாம். வாசனை மிகுந்த சந்தனம், ஜவ்வாது, அத்தர், கோரோசனை இப்படியாக பல வாசனை பொருட்கள் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது. மிக முக்கியமாக பொங்கல், பால் பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், தேன், கற்கண்டு, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழைப்பழம், திராட்சை முதலிய கனி வகைகளைப் படைக்க வேண்டும். மிக முக்கியமாக தாமரை மலர்கள் மகாலட்சுமிக்கு பிடித்தமானது. வில்வமும் மகாலட்சுமிக்குப் பிடித்தமானது.

16) பார்கவி

மகாலட்சுமியை மகளாக அடைய வேண்டும் என்று சாமானிய மன்னர்கள் மட்டுமல்ல ரிஷிகளும் விரும்புகிறார்கள். பிருகு மகரிஷி சாட்சாத் மகாலட்சுமி தனக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும். அந்த குழந்தையை, தான் கண்ணும் கருத்துமாக வளர்த்து மகாவிஷ்ணுவுக்கு மாமனாராக இருந்து மணம் முடித்துத் தர வேண்டும் என்று தவம் செய்தார். அந்த தவத்தை உத்தேசித்து மகாலட்சுமி பிருகு மகரிஷியின் மகளாகத் தோன்றினாள். பிருகு புத்ரி என்பதால் குழந்தைக்கு பார்கவி என்று பெயர் சூட்டினார். மகாலட்சுமியை ரிஷிகள், மன்னர்கள் மட்டுமல்ல, கோடீஸ்வரர்களும் விரும்புகின்றார்கள். எவ்வளவு செல்வம் இருந்தாலும் மேலும் செல்வம் வேண்டும் என்று பிரார்த்திக்காதவர்கள் யார் இருக்கின்றார்கள்?

17) செல்வன் யார்?

பொதுவாக செல்வத்தைச் சம்பாதிப்பது பெரிய விஷயம் அல்ல; அது தவறானவர்களிடம்கூட, சமயத்தில், பூர்வ ஜென்ம வினையால் சேர்ந்துவிடும் அது மிக சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு மகாலட்சுமியின் அருள் வேண்டும். எது நிரந்தர, நீங்காத செல்வமோ அதைத் தர வேண்டும் என்று மகாலட்சுமியை பிரார்த்திக்க வேண்டும். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம் ராமாயணத்தில் லட்சுமணன் மரவுரி தரித்து ராமனோடு காட்டுக்குக் கிளம்பத் தயாராகின்றான்.

அவனை காட்டுக்கு போ என்று யாரும் சொல்லவில்லை. மரவுரி தரிக்கவும் யாரும் சொல்லவில்லை. அவன் சகல சௌக்கியங்களும் அனுபவிக்கக் கூடிய இளவரசன். ஆனால், ராமனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று, எல்லாவற்றையும் உதறி விட்டுக் கிளம்பினான். இப்படிக் கிளம்பியதால் அசல் செல்வந்தன் ஆனான் என்ற பொருளில் ‘‘லஷ்மனா லஷ்மி சம்பன்ன: என்று அவனை ஸ்ரீமான் என்கிற பட்டம் கொடுத்து அழைத்தார்கள்’’. அவனுக்கு நிலைத்த செல்வமான கைங்கரிய செல்வம் கிடைத்தது.

18) அறிவைத் தருபவள் மகாலட்சுமி

ஆதிசங்கரர், வேதாந்த தேசிகர், வித்யாரண்யர் முதலியவர்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் எல்லோரும் மகாலட்சுமிக்கு ஸ்தோத்திரம் செய்தவர்கள். தங்களை நாடி வந்த ஏழைக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்று `கனகதாரா ஸ்தோத்திரம்’ செய்தார் ஆதிசங்கரர். வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி செய்தார். வித்யாரண்யருக்கு மகாலட்சுமியினுடைய தரிசனமே கிடைத்தது. ஆனால், இவர்கள் எல்லோருமே தங்களுக்காக மகாலட்சுமியை பிரார்த்திக்கவில்லை. ஆதிசங்கரர் மகாலட்சுமியை செல்வத்தின் அதிதேவதையாக மட்டும் கருதவில்லை. ஞானம் என்னும் நித்திய செல்வத்தை அருள்பவளாகவே கருதித் துதித்தார். அவர் பாடிய ஸ்லோகம் இது.

`விச்வாம ரேந்த்ர பதவிப்ரமதா தட்சம்
ஆநந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி
ஈஷந்நிஷீ தது மயிக்ஷண
மீக்ஷணார்த்தம்
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:’

‘‘உன் பார்வை விளையாட்டாய்கூட எவர் மீது பட்டாலும் அவர் விண்ணுலக வாழ்வை பெற்று இந்திரனுக்கு சமமாக வாழ்வான். நீலோத்பல மலர் மகுடம் போன்ற உன் திருமுகத்தின் விழிகளின் கடைக்கண் பார்வை ஒருக்ஷணம் என் மீது பட்டாலும் உன் கருணைக்கு ஆளாவேன் தாயே!’’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

19) தாயாரைச் சேவித்தீர்களா?

வைணவத்தில் மகாலட்சுமிக்கு ஒரு தனி இடம் உண்டு. அந்த இடம் பகவானிடத்திலும், பாகவதர்களிடத்திலும் உண்டு. ஒரு கையால் நாராயணனையும் ஒரு கையால் அவன் அடியார்களையும் பிடித்துக் கொள்பவள் மகாலட்சுமி. பகவானின் வலது மார்பில் அமர்ந்தவள். பக்தர்களின் இதயத்தில் வீற்றிருப்பவள். எனவே தான், எல்லா பெருமாள் கோயில்களின் வலப்புறத்திலும் மகாலட்சுமியினுடைய சந்நதி இருக்கும். அவளை தேவி என்றோ அம்பாள் என்றோ அழைக்கும் வழக்கம் இல்லை.

தாயார் என்று (தாயாரைச் சேவித்தீர்களா? தாயார் சந்நதிக்கு சென்றீர்களா?) என்று அழைப்பார்கள். இந்த நவராத்திரி உற்சவம் பெரும்பாலும் எல்லா பெருமாள் கோயில்களிலும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் தாயாருக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்து, பிரகார வலம் வந்து ஊஞ்சல் நிகழ்ச்சி நடத்துவார்கள். திருப்பதியில் நவராத்திரியை ஒட்டி நடக்கும் பிரம்மோற்சவத்திற்கு `நவராத்திரி பிரம்மோற்சவம்’ என்றே பெயர்.

III.கலைமகள்

20) ஆயுத பூஜை

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் கலைமகளுக்கு உரியது. இதில்தான் ஆயுத பூஜை என்னும் சரஸ்வதி பூஜை (மகாநவமி தினம்) வருகிறது. நவராத்திரி பூஜையிலேயே விசேஷமாக எல்லோரும் கொண்டாடும் பூஜை இது. தொழிலாளர்கள், சிறு கடை வைத்திருப்பவர்கள், பெரிய நிறுவனம் நடத்துபவர்கள் என தொழில், வணிகம் இரண்டிலும் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் சரஸ்வதி பூஜை என்னும் ஆயுதபூஜை குதூகலமான விழா. புரட்டாசி மாதத்தில் வருகின்ற நவராத்திரிக்கு `சாரதா நவராத்திரி’ என்ற பெயர். சரத் காலத்தில் நிகழ்வது (அக்டோபர்) என்பதால் சாரதா நவராத்ரி. `சாரதா’ என்ற திருநாமம் விசேஷமாக கலைமகளுக்கு உரியது.

21) சாரதா பீடம்

அம்பிகை, வித்யா ரூபிணியாக சகல கலைகளையும் அளிக்கின்றார். எனவே நவராத்திரியில் அவளை கலைமகளாகக் கருதி பூஜிப்பது சிறப்பு. அதைப் போலவே மகாலட்சுமியை வெற்றி தரும் துர்கையாகக் கருதி, விஜயலட்சுமி என்ற திருநாமத்திலும், கலைகளையும் கல்வியையும் தரும் கலைமகள் அம்சமாக வித்யா லட்சுமி என்ற திருநாமத்திலும் வழிபடுவது உண்டு. இதுதவிர, கலைமகளுக்கு என்று தனி வழிபாடு உண்டு. காஷ்மீர் தேசத்தில் சரஸ்வதி வழிபாடு அதிகம்.

அங்கு வசித்து வந்தவர்கள் சரஸ்வதியை மூல தெய்வமாகவும் முதல் தெய்வமாகவும் வணங்கினார்கள். அதனால், அவர்களை (காஷ்மீர்) “பண்டிட்கள்” என்று அழைப்பார்கள். அங்கே சாரதா பீடம், சாரதா பண்டாரம் (நூல் நிலையம்) உண்டு. அங்கு சென்றுதான் சுவாமி ராமானுஜர் போதாயன விருத்தியுரையைக் கொண்டு வந்து `ஸ்ரீபாஷ்யம்’ (பிரம சூத்திர உரை) இயற்றினார்.

22) காஞ்சியில் சரஸ்வதி

தென்னாட்டில் காஞ்சி மாநகரம் விசேஷமானது. கோயில்கள் அதிகம். காசியைப் போலவே வித்யாசாலைகளும் அதிகம். அதனால் `நகரேஷுகாஞ்சி’ என்றார்கள். காஞ்சிக்கு காஷ்மீர் மண்டலம் என்றும் ஒரு பெயர் உண்டு. தட்சிண காஷ்மீரம் என்று அழைத்தார்கள். காரணம், கலைமகள் அருளான வித்யா பலம், காஞ்சியில் பூரணமாகவும்பிரகாசமாகவும் இருந்தது. அப்பர் சுவாமிகளும் “கல்வியில் கரையில்லாத காஞ்சி” என்று காஞ்சி மாநகரத்தை புகழ்ந்து பாடினார். காமாட்சி அன்னையே இங்கே சரஸ்வதி தேவியாக (வாக் தேவியாக) விளங்குகிறாள் என்ற ஐதீகம் உண்டு. காமாட்சி ஆலயத்தில் எட்டு திருக்கரங்களுடன் சரஸ்வதி தேவி காட்சி தருகின்றாள்.

23) கலைமகளின் அடையாளங்கள்

பொதுவாகவே அக்காலத்தில் கல்வி என்பது உலகியல் கல்வியைக் குறிக்கவில்லை. மெய்யறிவு (ஞானம்) பெறுவதுதான் கல்வியின் பயனாக இருந்தது. ஞானாம்பிகை, வித்யாம்பிகை என்றெல்லாம் கலைமகளுக்கு திருநாமங்கள் உண்டு. திருவள்ளுவரும் படிப்பின் பயன் இறைவனை உணர்ந்து, அவன்திருவடியை வணங்கி பயனடைவதேஎன்றார்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

அகங்காரத்தை அடித்து நொறுக்கி, அற்புத ஞானம் தருபவள் சரஸ்வதி தேவி. தூய்மையான வெள்ளை ஆடை, ஸ்படிக மாலை, ஏட்டுச் சுவடி, கையில் வீணை- இவை எல்லாம் கலைமகளின் அடையாளங்கள். ஒருவருடைய வீட்டில் சில புத்தகங்கள் அடங்கிய நூல் நிலையமோ இசைக்கருவிகளோ இருந்தால், அங்கே கலைமகளின் சாந்நித்தியம் உண்டு என்று எடுத்துக் கொள்ளலாம்.

24) சரஸ்வதி அந்தாதி

“சரஸ்வதி அந்தாதி” என்ற நூலை இயற்றியவர் கம்பர். கம்பரின் ஒன்பது படைப்புகளுள் ஒன்றான இந்த நூல் அந்தாதி சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. இதன் பாட்டுடைத் தலைவி கலைமகள். காப்புப் பாடல் தவிர்த்து இதில் முப்பது பாக்கள் உள்ளன. கம்பருக்கு கிழங்கு விற்கும் பெண்ணாக வந்து சரஸ்வதி அருள் கொடுத்ததாக ஒரு கதை உண்டு. அதில் ஒரு அற்புதமான பாடல்.

`பாதாம் புயத்தில் பணிவார் தமக்குப்
பலகலையும்
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி
வெள்ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தில் இருப்பாய் இருப்பஎன்
சிந்தையுள்ளே
ஏதாம் புவியில் பெறலரி தாவ (து) எனக்கினியே
சரஸ்வதி தேவியை வணங்க சகல வித்தைகளும் வசப்படும் என்பது இப்பாடலின் சுருக்கமான பொருள். சப்த மாதர்களுள் சரஸ்வதியை ‘‘பிராமி’’ என்று அழைப்பார்கள்.

25) வழிகாட்டி

நளவெண்பாவில் ஒரு அழகான கதை வருகிறது. விதர்ப்பநாட்டு இளவரசி தமயந்தி. அவள் மிகமிக அழகானவள். அவள் நளச்சக்கரவர்த்தியை மாலையிட விரும்பினாள், சுயம்வரம் நடந்தது, நிடத நாட்டு மன்னனான நளச்சக்கரவர்த்தி அந்த சுயம்வரத்துக்கு வந்திருந்தான். தமயந்தியை மணக்க விரும்பிய தேவர்கள் அனைவரும் சுயம்வர மண்டபம் வந்தனர். எல்லோரும் நளன் போலவே இருந்ததால், யாருக்கு மாலை போடுவது என்று திகைத்தாள். அப்பொழுது சரஸ்வதி தேவி, ‘‘யாருடைய கால்கள் தரையில் பொருந்து கிறதோ அவன்தான் நீ விரும்புகின்ற நளன்” என்று உணர்த்தினாள். அவ்வாறே தமயந்தி மாலையிட்டாள். சரஸ்வதி தேவி அவளுக்கு வழிகாட்டினாள். இதற்கு என்ன பொருள் என்று சொன்னால், கற்ற வித்தை (கலைமகள்) எப்பொழுதும் கைவிடாது; சரியான வழியைக் காட்டும் என்பதே ஆகும்.

26) எல்லா வித்யார்த்திகளுக்கும் குரு

தமிழில் அற்புதமான காப்பியம் சீவக சிந்தாமணி. இந்தக் காப்பியத்தில் `நாமகள் கலம்பகம்’ என்று கலைமகளின் புகழ் பாடும் பகுதி உண்டு. ஒட்டக்கூத்தர் தக்கயாக பரணி எழுதுகின்ற பொழுது சரஸ்வதியின் வாழ்த்து பாடலோடு எழுதினார். `சரஸ்’ என்பதற்கு நீர், ஒளி (பிரகாசம்) என்று பொருள். சரஸ்வதி தேவி அவதார திதி புரட்டாசி வளர்பிறை நவமி திதி. எனவே, மகா நவமி அன்று சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுகின்றோம். அவளுடைய அவதார நட்சத்திரம் மூலம். மூலம் கேதுவின் நட்சத்திரம் அது தவிர மூலம் அமைந்த ராசி ஒன்பதாவது ராசியான தனுசு ராசி. அது காலபுருஷனுக்கு பாக்கியராசி. அதன் அதிபதி பிரகஸ்பதியான குரு. சரஸ்வதி தேவியே எல்லா வித்யார்த்திகளுக்கும் குரு அல்லவா.

27) நா இனிக்க பேச ‘‘நாமகள்’’

தமிழகத்தின் பல இடங்களில் சரஸ்வதி தேவியின் திருவுருவத்தை தரிசிக்கலாம். ஆனால், சரஸ்வதி தேவிக்கு என்று பிரத்தியேகமான ஒரு தனிக் கோயில் உண்டு. அது திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ளது. சரஸ்வதி பூஜை இங்கு கோலாகலமான விழாவாக நடைபெறும். அன்றைய நாளில் எழுதுகோல், புத்தகங்கள் வைத்து கல்வி கற்கும் பிள்ளைகள் வணங்குவார்கள். பேச்சு கலைக்கு உரிய வாக்தேவி என்பதால், கிராமங்களில் சரஸ்வதி தேவியை `பேச்சாயி அம்மன்’ என்று வணங்குவார்கள்.

அது மட்டும் அல்ல பேசும் பேச்சு நாவிலிருந்து வருகிறது. அங்கே சரஸ்வதி குடியிருந்து அருள் செய்தால் மட்டுமே நல்ல வார்த்தைகள், இனிமையான பேச்சு, அறிவார்ந்த பேச்சு வரும். எனவே, நாவில் குடியிருப்பவள் என்ற பொருளில் நாமகள் என்பார்கள். அவளுடைய அற்புதமான ஸ்லோகம்.

“சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா’’
பொருள்: சரஸ்வதி – தேவி சரஸ்வதி!
நம: துப்யம் = நமஸ்துப்யம் – உனக்கு நமஸ்காரங்கள்.
வரதே – வரம் தருபவளே!

காமரூபிணி – வேண்டியவற்றைத் தருபவளே!
வித்யா ஆரம்பம் = வித்யாரம்பம் – கல்வித் தொடக்கத்தை
கரிஷ்யாமி – செய்கிறேன்
சித்தி: பவது மே சதா – அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!

28) கலை விழா ‘‘நவராத்திரி’’

நவராத்திரி விழா என்பது கலைகளின் விழா. நம் நாட்டில் உள்ள நுண் கலைகளாகிய (Fine arts) அனைத்து கலைகளும் இத்தகைய விழாக்களின் பின்னணியிலேயே உருவானவை. இத்தகைய விழாக்கள்தான் அக்கலைகளை வளர்த்தன. இந்த விழாக்கள் வெறும் தெய்வீக விழாக்கள் என்ற சிந்தனையில் இருந்து விலகி, வேறுகோணத்தில் பார்த்தாலும் இது ஒவ்வொருவரின் படைப்பாற்றலையும், கற்பனைத் திறனையும், மகிழ்ச்சியையும், பிறரோடு கலக்கின்ற குணங்களையும் வளர்க்கிறது என்றால் அது மிகை இல்லை. நவராத்திரியில் செய்யக்கூடிய பல்வேறு விதமான நிவேதனங்களாகட்டும், போடுகின்ற கோலங்களாகட்டும், வைக்கக்கூடிய கொலு ஆகட்டும் இவைகள் எல்லாம் நம்மை நம் மனதை, நம்முடைய சுற்றுச்சூழலை, அழகாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.

29) நவராத்திரி கொலு

நவராத்திரியில் கொலு என்பது விசேஷம். பல்வேறு விதமான பொம்மைகளை படிகளில் அடுக்குவார்கள். இந்த படிகள் கீழிருந்து மேலே ஒவ்வொன்றும் உயரமாகப் போய்க் கொண்டே இருக்கும். கீழ்ப்படியில் சாதாரண மனித உருபொம்மைகளை அல்லது விலங்குகளை அல்லது தாவரங்களை வைப்பவர்கள், மேல்படியில் பராசக்தியை அல்லது இஷ்ட தேவதையை வைத்து நிறைவு செய்வார்கள். ஒவ்வொரு மனிதனும் படிப்படியாக உயர வேண்டும், வான் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் அந்த நிலையை அடைந்து தெய்வத்தின் அருளைப் பெற வேண்டும் என்பதுதான் நவராத்திரி கொலுப் படிகள் நோக்கம்.

30) அஷ்டமி, நவமி தசமி

நவராத்திரியில் கன்னி பூஜை என்பது விசேஷமானது. முதல் நாள் இரண்டு வயது சிறுமியை அம்பிகையாக பாவித்து வணங்குவார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வயதுகூட உள்ள சிறுமியை அம்பாளாக பாவித்து வணங்குகின்ற கன்னி பூஜை சிறப்பானது. அது மட்டும் இல்லை, இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகையை ஒவ்வொரு வடிவத்தில் அலங்கரித்து பூஜை செய்வார்கள்.

மகேஸ்வரி, கவுமாரி, வாராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, மகா சரஸ்வதி, நார சிம்ஹி, சாமுண்டி ஆகிய வடிவங்களில் அம்பிகையை அலங்கரித்து வழிபடுவார்கள். இந்த ஒன்பது நாளும் வழிபட முடியாதவர்கள் குறைந்தபட்சம் அஷ்டமி, நவமி தசமி முதலிய நாட்களில் விரதம் இருந்து வழிபட வேண்டும். நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், சந்தனம், தாம்பூலம், பூக்கள் கொடுக்க தேவியின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

நிறைவுரை

நாம் நவராத்திரி கொண்டாடும் இந்த விழாவை கர்நாடகத்தில் `தசரா’ என்றும், மேற்கு வங்காளத்தில் `துர்கா பூஜை’ என்றும், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் `ராம்லீலா’ என்றும் அழைப்பார்கள். நவராத்திரி பூஜையின் போது அக மகிழ்ச்சியும் புற மகிழ்ச்சியும் ஒருங்கே வளர்கிறது. நாம் பிறர் வீட்டுக்கு போவதாலும் பிறர் நம் வீட்டுக்கு வருவதாலும் உறவுகள் வளர்கின்றன. அதனால், மகிழ்ச்சி இரட்டிப்பாக மாறுகிறது.

தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி

The post முத்துக்கள் முப்பது-சகல நலன்களையும் அருளும் நவராத்திரி appeared first on Dinakaran.

Tags : Navratri ,
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை