×

தவிடு என்றுகூறி இறக்குமதி தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1.5 கோடி கசகசா பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகம் வழியாக பல்வேறு நாடுகளில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் சில நேரங்களில் சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தப்படுவது நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க ஒன்றிய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு கன்டெய்னரில் கால்நடை தீவனம் (பார்லி தவிடு) இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கன்டெய்னர், தூத்துக்குடியில் உள்ள தனியார் சரக்கு பெட்டக கிடங்கில் சுங்கத்துறை ஆய்வுக்காக வைக்கப்பட்டு இருந்தது. அப்போது இந்த கன்டெய்னரில் இருந்து கசகசா சிந்தியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த ஒன்றிய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கன்டெய்னரை திறந்து சோதனை நடத்தினர். அதில் சுமார் 9 டன் கசகசா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. கசகசா இறக்குமதி செய்ய தடை இல்லை. என்றாலும், அதற்கு உரிய அனுமதி பெற்று, உரிய வரி செலுத்த வேண்டும். எனவே வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் தவிடு என்ற பெயரில் கசகசாவை கடத்தி வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட 9 டன் கசகசா மூட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து இறக்குமதி செய்தவர்கள் குறித்து ஒன்றிய வருவாய் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தவிடு என்றுகூறி இறக்குமதி தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1.5 கோடி கசகசா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi port ,Thoothukudi ,Thoothukudi Vausi port ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...