×

கழுகுமலையில் பழுது நீக்கி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த சிசிடிவி கேமராக்கள்

*பொதுமக்கள் மகிழ்ச்சி

கழுகுமலை : கழுகுமலையில் தினகரன் செய்தி எதிரொலியாக சிசிடிவி கேமராக்கள் பழுது நீக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். கழுகுமலை பேரூராட்சி பகுதியில் சுமார் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். பிரதான தொழிலாக தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. மேலும் விவசாய கூலித் தொழிலாளர்களும் உள்ளனர். சிலர், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைக்கு வேலை செய்து வருகின்றனர்.

பேரூராட்சி பகுதியில் திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல் துறை சார்பில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சங்கரன்கோவில் சாலை தனியார் மேல்நிலைப்பள்ளி அருகே, மேல பஜார், கயத்தாறு பிரதான சாலை, தேரடி அருகே, காந்தி மைதானம், 8வது பலி பீடம், எட்டயபுரம் சாலை, பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் சுமார் 17 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வர்த்தக சங்கம் சார்பில் பொருத்தப்பட்டன. இதற்குரிய கட்டுப்பாட்டு அறை கழுகுமலை காவல் நிலைய வளாகத்தில் செயல்பட்டது. இதனால் திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்கள் குறைந்திருந்தன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கழுகுமலை பேரூராட்சி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 17 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பழுதானது. கயத்தாறு பிரதான சாலை, எட்டயபுரம் சாலை, மேல பஜார் ஆகிய இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுவிட்டன. இதுகுறித்து கடந்த செப்.9ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.இதனிடையே கழுகுமலை பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளும், முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசமும் அதிகரித்தது.

இதையடுத்து கண்காணிப்பு கேமராக்களை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதைத் தொடர்ந்து கழுகுமலை வர்த்தக சங்கம் மற்றும் காவல் துறை சார்பில், நகரில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களும் பழுது நீக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். மேலும் சிசிடிவி கேமராக்களை பழுது நீக்க நடவடிக்கை எடுத்த போலீசாருக்கும், செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் நன்றி தெரிவித்தனர்.

The post கழுகுமலையில் பழுது நீக்கி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த சிசிடிவி கேமராக்கள் appeared first on Dinakaran.

Tags : Kalgukumalai ,Dinakaran ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்