×

பருவமழை குறைவால் பட்டுப்போகும் பல ஆயிரம் பனைமரங்கள்

*2 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்து வருவதால் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பனை மரங்கள் பட்டுப்போய் வருவதால் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான முக்கிய தொழிலாக விவசாயம், மீன்பிடி தொழில் உள்ளது. மேலும், பனைமரத்தொழிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் ராமேஸ்வரம் தீவு தொடங்கி, மண்டபம், திருப்புல்லாணி, கடலாடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் உள்ளிட்ட ஒன்றியங்களில் பனைமரங்கள் அதிகமாக உள்ளன.

மாவட்டம் முழுவதும் 15 லட்சத்திற்கு அதிகமான பனை மரங்கள் உள்ளன. மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும், அதனை சார்ந்த மகளிர் சுய உதவி குழுக்கள், கைவினை பொருட்கள் தயாரிப்பாளர்கள், வியாபாரிகளும் பயனடைந்து வருகின்றனர். குறிப்பிட்ட சில பனை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நிய செலவாணியை ஈட்டி தருவதிலும் பனை மரத்திற்கு முக்கிய பங்கு உள்ளது.

மரங்கள் அழிப்பு…:

கடந்த காலங்களில் பருவமழை பெய்தவுடன், நெல் அறுவடை செய்யும் நேரங்களில் கருப்பட்டி உற்பத்திக்காக பனை மரங்களில் பதனீருக்காக பாளை வெட்ட துவங்குவது வழக்கம். இதற்கு தை மாதத்தில் பனைமர திருவிழா கூட கோலாகலமாக நடந்து வந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டுக்கு முன்பு வரை போதிய மழையின்றி பனைமரங்கள் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வியாபார நோக்கத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது.

கருப்பட்டி உற்பத்தி பாதிப்பு:

கடந்த 2019ம் ஆண்டிற்கு முந்தைய காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக சுமார் 10 வருடங்களாக ஏற்பட்ட குறைவான மழை மற்றும் வறட்சியால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பனைமரங்கள் பட்டுபோனது. 2020 முதல் 2022 வரை நல்ல மழை பெய்தாலும் கடந்த கால வறட்சியால் பாதிக்கப்பட்ட பனைமரங்கள் துளிர்க்கவில்லை. இந்நிலையில் கடந்தாண்டு மழை குறைந்ததாலும், இந்தாண்டு போதியளவு கோடை மழை பெய்யாததாலும், தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதாலும் மீண்டும் ஆயிரக்கணக்கணக்கான பனை மரங்கள் பட்டுப்போய் வருகிறது. இதனால் இந்தாண்டு கருப்பட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து பட்டுபோன மரங்களை அதன் உரிமையாளர்கள் வெட்டி வருகின்றனர். இதனால் வரும் காலங்களில் இதனை நம்பியுள்ள 2 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பனைமர தொழிலாளிகள் கூறும்போது, ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப பாரம்பரிய தொழிலாக பனைமரத் தொழில் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் பனை சீசன் துவங்குவது வழக்கம்.

தை மாதத்தில் பதனீருக்காக பாளை சீவுவதை ஒரு சடங்காக பாவித்து திருவிழாவாக கொண்டாடி வந்தோம். ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக காலநிலை மாறி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பிப்ரவரி மாதத்தில் சீசன் துவங்குகிறது. ஒவ்வொரு பகுதியிலும் நூற்றுக்கணக்கான மரங்கள் என மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்கள் பட்டுபோய் விட்டன. இதனால் இத்தொழில் நலிவடைந்து வருகிறது.

ஆண்டுதோறும் தொழிலாளர்கள் பிரதானமாக செய்யக் கூடியதும், வருமானம் தரக்கூடியதுமான மரத்தை சீரமைத்தல், பதனீர் இறக்கி, கருப்பட்டி உற்பத்தி செய்தல் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மரத்தின் உரிமையாளர்கள் மட்டைகளிலிருந்து நார் பிரித்தெடுத்தல், வீடு வேயுதல் மற்றும் இதர உபயோகத்திற்கு ஓலை வெட்டுதல், பனைமரச்சட்டம் உள்ளிட்ட மரச்சாமான் பயன்பாடு, கட்டிட உபயோகம், சேம்பர், காளவாசல் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக பனைமரங்களை வெட்டி வருகின்றனர். இதனால் வரும் காலங்களில் இத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி வருகிறது’’ என்றனர்.

50 லட்சம் பனை விதை நடும் பணிகள் துவக்கம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டிலேயே பனைமரங்கள் அதிகமாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் வறட்சி உள்ளிட்ட சில காரணங்களால் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் இங்கு மட்டும் 50 லட்சம் பனைமரங்கள் நடப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக 22 லட்சம் பனைமர விதைகள் நடும்பணி துவங்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டிற்குள் 50 லட்சம் பனைமர விதைகள் நடும் பணிகள் முடியும். இதற்காக மாணவர்கள், தன்னார்வலர்கள், 100 நாள் திட்ட பணியாளர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்’’ என்றார்.

கடனுதவி வழங்க வேண்டும்

பனைமரத்தொழில் என்பது சீசன் தொழிலாகும். சீசன் இல்லாத மற்ற நேரங்களில் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திடவும், குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள பனைமர நலவாரியம், பனைகருப்பட்டி கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பிற தொழில் துவங்க பயிற்சி மற்றும் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு புறம்போக்கு இடங்கள், நீர்நிலை காலியிடங்களில் புதிய பனை மரக்கன்றுகளை நட வேண்டும்.

விவசாயிகள், பொதுமக்கள், பனை தொழிலாளர்களுக்கு பனைமரக்கன்றுகளை இலவசமாக வழங்க வேண்டும். சீசன்களில் பனைமர தொழிலுக்கு தேவையான தளவாட சாமான்களை நவீன முறையில் தயார் செய்து, மானியத்தில் வழங்க வேண்டும். தொழிலாளர் குடும்பத்திற்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கவேண்டும். தொழிலாளர் வைப்புநிதி முறையை அமல்படுத்தி, வைப்பு தொகையை அரசு செலுத்தவேண்டும். இதனால் வருங்கால அவசர மருத்துவ உதவிகள், பெண்கள் திருமணத்திற்கு உதவியாக இருக்கும். மாணவர்களுக்கு உதவிதொகையை அதிகமாக வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post பருவமழை குறைவால் பட்டுப்போகும் பல ஆயிரம் பனைமரங்கள் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்