கோவை: பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் கோவை வீடு மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை நடைபெற்று வந்தபோது, அந்த தொழிலில் கொடிகட்டி பறந்தவர் சாண்டியாக்கோ மார்ட்டின் என்ற லாட்டரி மார்ட்டின். சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போதும் லாட்டரி விற்பனையில் மார்ட்டின் ஆதிக்கம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. பல ஆயிரம் கோடிக்கு அதிபதியான லாட்டரி மார்ட்டினுக்கு கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நிறைய சொத்துக்கள் இருக்கும் நிலையில், இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொண்டிருக்கின்றன.
விதிகளை மீறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக மார்ட்டின் மீது கேரளாவில் வழக்கு நிலுவையில் உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கும் கொச்சியில் நிலுவையில் இருக்கும் நிலையில், மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனனின் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. இதையடுத்து ஜூன் மாதத்தில் 173 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள மார்ட்டின் வீடு, அவருடைய ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் காந்திபுரத்தில் உள்ள மார்ட்டினுக்கு சொந்தமான லாட்டரி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
The post பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் கோவை வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை..!! appeared first on Dinakaran.