×

அரிசி கொம்பன் யானை 12 முறை அடித்து நொறுக்கிய ரேஷன் கடைக்கு மின்வேலியுடன் புதிய கட்டிடம்

மூணாறு, அக். 13: கேரளா மாநிலம் மூணாறு அருகே சாந்தன்பாறை பன்னியார் எஸ்டேட்டில் அரிசி கொம்பன் யானை 12 முறை அடித்து நொறுக்கிய ரேஷன் கடை பல மாதங்களுக்கு பிறகு புதிதாக கட்டப்பட்டு செயல்பட ஆரம்பித்துள்ளது. அரிசி கொம்பன் யானை இதுவரை சின்னக்கானல், ஆனையிறங்கல், சாந்தன்பாறை போன்ற பகுதிகளில் 60 வீடுகளை சேதப்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மட்டுமின்றி தனியார் மளிகைக் கடைகளையும் அரிசி கொம்பன் யானை பலமுறை அடித்து நொறுக்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த 2019 முதல் இதுவரை பன்னியார் எஸ்டேட்டில் செயல்பட்டு வந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான ரேஷன் கடையை 12 முறை உடைத்து அரிசி, ஆட்டா, சர்க்கரை அனைத்தையும் தின்று தீர்த்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் 5 முறை இந்த கடையை சேதப்படுத்தி உள்ளது. கடந்த ஜனவரி 27ம் தேதி அரிசி கொம்பன் யானை ரேஷன் கடையை முழுவதுமாக அடித்து நொறுக்கியது.

அதன்பிறகு, ரேஷன் கடை பன்னியார் எஸ்டேட்டில் உள்ள தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து தொழிலாளர்களின் ரேஷன் விநியோகம் தடைபடுவதாக புகார்கள் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாலுகா வழங்கல் அலுவலர் சாந்தன்பாறைக்கு வந்து ஆய்வு நடத்தினர். இந்நிலையில், ரேஷன் கடை இயங்கி வந்த கட்டிடத்தை சுற்றி மின் வேலி அமைக்கப்பட்டு புதிய ரேஷன் கடை செயல்பட ஆரம்பித்துள்ளது.

The post அரிசி கொம்பன் யானை 12 முறை அடித்து நொறுக்கிய ரேஷன் கடைக்கு மின்வேலியுடன் புதிய கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Arisi Komban ,Munnar ,Rice Kompan ,Chandanparai Panniyar ,Munnar, Kerala ,Dinakaran ,
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்