×

எம்கேபி நகர், பூக்கடை பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட கேட்பாரற்ற வாகனங்கள், கடைகள் அகற்றம்: போலீசார் நடவடிக்கை

பெரம்பூர், அக்.13: எம்கேபி நகர், பூக்கடை பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட கேட்பாரற்ற வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி, எம்கேபி நகர் வடக்கு அவென்யூ சாலையின் இருபுறமும் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள கேட்பாரற்ற ஆட்டோ, கார், மினி வேன் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. மேலும், இரவு நேரங்களில் இந்த வாகனங்களுக்கு பின்னால் நின்று சிலர் கஞ்சா புகைப்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணனுக்கு புகார் வந்தது.

அதன்பேரில், வியாசர்பாடி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரந்தாமன், கொடுங்கையூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வரதன் உள்ளிட்டோர் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்டுள்ள அந்த வாகனங்களை அப்புறப்படுத்தும்படி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தனர். அதன் அடிப்படையில் தண்டையார்பேட்டை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில் குறிப்பிட்ட நார்த் அவென்யூ சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வர்கீஸ் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட கேட்பாரற்ற ஆட்டோ, கார், மினிவேன் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களை நேற்று அப்புறப்படுத்தினர்.

அந்த வாகனங்களை முல்லை நகர் சுடுகாடு அருகே உள்ள காலி மைதானத்தில் நிறுத்தி வைத்தனர். மீண்டும் அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் உத்தரவின் பேரில், பூக்கடை போக்குவரத்து துணை ஆணையர் குமார் மேற்பார்வையில், உதவி ஆணையர் சம்பத் பாலா, யானைகவுனி போக்குவரத்து ஆய்வாளர் ஜாகீர் உசேன் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை மற்றும் கொத்தவால்சாவடி மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், தள்ளுவண்டி கடைகளை அகற்றினர்.

இதுகுறித்து போக்குவரத்து உதவி ஆணையர் சம்பத் பாலா கூறும்போது, ‘‘பூக்கடை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மொத்த விற்பனை கடைகள் அதிகம் உள்ளன. அதிகளவு மக்கள் சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து இங்கு பொருட்களை வாங்க வருகிறார்கள். இதனால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை சரிசெய்ய கூடுதல் ஆணையர் உத்தரவின் பேரில் பூக்கடை, யானைகவுனி, சவுகார்பேட்டை, கொத்தவால்சாவடி, மண்ணடி, பாரிமுனை பகுதியில் போக்குவரத்து போலீசார் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள். பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பையும் சரி செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்,’’ என்றார்.

எச்சரிக்கை
வால்டாக்ஸ் சாலையில் அதிகமாக பார்சல் லாரிகள், வேன், மீன்பாடி வண்டி போன்ற வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பார்சல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

லாரிகளுக்கு தடை
மூலக்கொத்தளம் கருவாடு விற்பனை பகுதியில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை லாரிகள் வருவதற்கு போக்குவரத்து போலீசார் தடை விதித்தனர். இதேபோல் உதவி ஆணையர் சம்பத் பாலா, கொத்தவால்சாவடி போக்குவரத்து ஆய்வாளர் ராமதுரை தலைமையிலான போக்குவரத்து போலீசார் நேற்று காலை சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்றினர்.

கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்
தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டலம், 63வது வார்டு பழைய ஜிஎஸ்டி சாலையில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வடிகாலை ஆக்கிரமித்து, சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கடைகளின் குப்பை கழிவுகள் வடிகாலில் கொட்டப்பட்டதால், அடைப்பு ஏற்பட்டு, மழைக்காலத்தின்போது நீரோட்டம் தடைபட்டு, சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. எனவே, வடிகால் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் அழகுமீனா உத்தரவிட்டார். அதன்பேரில், தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், நேற்று மழைநீர் வடிகால் மீது இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.

The post எம்கேபி நகர், பூக்கடை பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட கேட்பாரற்ற வாகனங்கள், கடைகள் அகற்றம்: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : MKP Nagar ,Perambur ,Vyasarpadi ,MKB Nagar ,Dinakaran ,
× RELATED போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது