×

விடுமுறை நாட்களில் ஆதார் பதிவுகள் நடத்த வேண்டாம் ஒன்றிய அரசு திடீர் உத்தரவு

நாகர்கோவில், அக்.13: விடுமுறை நாட்களில் ஆதார் பதிவு மையங்கள் செயல்பட வேண்டாம் என்று ஒன்றிய அரசு திடீரென உத்தரவிட்டுள்ளதால் வரும் நாட்களில் ஞாயிற்றுகிழமைகளில் ஆதார் மையங்கள் செயல்படுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளது. ஆதார் மையங்களில் மக்களின் நெரிசலை குறைக்க பல்வேறு விடுமுறை நாட்களிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு பணியாளர்கள், பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவியர், நீண்ட தூரங்களில் இருந்து வருவோர் உள்ளிட்டோர் விடுமுறை நாட்களில் ஆதார் மையங்களில் திருத்த பணிகளை மேற்கொள்கின்றனர். இந்தநிலையில் ஆதார் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளை பொது விடுமுறை நாட்களில் மேற்கொள்ளக்கூடாது என்று ஒன்றிய எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பவியல் துறை உத்தரவிட்டுள்ளது.

யூனிக் ஐடென்டிபிகேஷன் அதாரிட்டியின் ஆதார், யுஐடி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பொது விடுமுறை நாட்களிலும், பிற கூடுதல் நேரங்களிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இத்துடன் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஆதார் மையங்களில் பதிவு நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை செயல்பட வேண்டிய யுஐடிஏஐ இயந்திரங்கள் அதிக நேரம் செயல்பட்டு யுஐடி பதிவுகள் நடத்துகின்ற நிலையில் அதன்வழியாக முறைகேடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு விடுமுறை நாட்களில் செயல்பட்டால் அந்த மையங்களுக்கான அனுமதியை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் யுஐடி பதிவுகள் உள்ளிட்ட சேவைகள் பொது விடுமுறை நாட்களில் நடைபெற்றது. இம்மையங்களில் அப்போது பெருமளவில் கூட்டமும் நிரம்பி வழிந்தது. ஆனால் தற்போது புதிய உத்தரவு அடிப்படையில் ஞாயிறு, 2வது சனிக்கிழமை உள்ளிட்ட இடங்களில் யுடிஐ பதிவுகள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இம்மையங்களின் பணி வேளை என்பது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் வாரம் முதல் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post விடுமுறை நாட்களில் ஆதார் பதிவுகள் நடத்த வேண்டாம் ஒன்றிய அரசு திடீர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union government ,Nagercoil ,Aadhar Enrollment Centers ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த...