×

சட்டவிரோதமாகரூ.910 கோடி பணம் பரிமாற்றம் செய்த விவகாரம் தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்க துறை ரெய்டு: முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்

சென்னை: சட்டவிரோதமாகரூ.910 கோடி பணம் பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக, பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகனுக்கு சொந்தமான கோவை, சென்னை என 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின். இவர் கோவை வெள்ளக்கிணறு பகுதியை பூர்வீகமாக கொண்டவர். லாட்டரி சீட்டு விற்பனை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கொடி கட்டி பறந்தவர். தற்போதும் வெளிமாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறார். தொழிலதிபர் மார்ட்டின், சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைதொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தியதில் கடந்த 2009ம் முதல் 2010ம் ஆண்டு காலக்கட்டத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடாகரூ.910 கோடி சம்பாதித்ததாகவும், அந்த பணத்தை தனது 40 நிறுவனங்கள் மீது அசையா சொத்துக்களில் முதலீடு செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக பல நூறு கோடி ரூபாய் வெளிநாடுகளிலும் முதலீடு செய்து இருந்ததும் சிபிஐ கண்டுபிடித்தது. அதைதொடர்ந்து சிபிஐ வழக்கு விபரங்களை அமலாக்கத்துறைக்கு ஒப்படைத்தது. அதன்படி அமலாக்கத்துறை தொழிலதிபர் மார்ட்டின் மீது சட்டவிரோத பணம்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முறைகேடாக பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் பதுக்கியது உறுதியானது.

பின்னர் அமலாக்கத்துறை கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி தொழிலதிபர் மார்ட்டினக்கு சொந்தமானரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கியது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் 11 மற்றும் 12ம் ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மகன், மருமகனுக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மீது நடத்திய விசாரணையை தொடர்ந்து தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானரூ.457 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கடந்த மே மாதம் 15ம் தேதி முடக்கி நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் மீண்டும் தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள பூர்வீக வீடு, அதே பகுதியில ஹோமியோபதி மருத்துவமனை, அலுவலகம், காந்திபுரம் 6வது வீதியில் உள்ள லாட்டரி அலுவலகம் என 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதேபோல சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதி காதர் நவாஸ்கான் சாலையில் மார்ட்டின் மகனுக்கு சொந்தமான வீட்டில் ரெய்டு நடந்தது.
அதேபோல், சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கள் சாலையில் உள்ள மார்டின் மருமகன் அர்ஜூன் ஆதவா வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள எஸ்.எஸ்.மியூசிக் தலைமை அலுவலகம் என 2 இடங்களில் என மொத்தம் தமிழகம் முழுவதும் 7 இடங்களில் நேற்று காலை முதல் இரவு வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வெளிநாடுகளில் குவித்து வைத்துள்ள சொத்து விபரங்கள் மற்றும் முதலீடு ஆவணங்கள் பல சிக்கியதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் மார்ட்டின், மற்றும் அவரது மகள் மற்றும் மருமகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணம் பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானரூ.630 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post சட்டவிரோதமாகரூ.910 கோடி பணம் பரிமாற்றம் செய்த விவகாரம் தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்க துறை ரெய்டு: முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர் appeared first on Dinakaran.

Tags : Martin ,Chennai ,Dinakaran ,
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...