×

உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர் பிரச்னை தீர்க்கப்படும்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் உறுதி

சென்னை: உலர் சாம்பல் செங்கல் பிளாக் உற்பத்தியாளர்கள் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாநில தலைவர் ஜி.அருள்ராஜா தலைமையில் பொதுச்செயலாளர் வி.சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது. பொருளாளர் ஐ.தமிழ்செல்வன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் கலந்துகொண்டு பேசுகையில், ”வீடுகள் கட்ட மண் எடுத்து செங்கல் செய்யும்போது பிரச்னை ஏற்படுகின்றன. செங்கலை எரிக்க வைக்கும்போது ஏற்படும் வெப்பத்தால் ஓசோன் மண்டலத்தில் பிரச்னை ஏற்படுகிறது. இதை உலர் சாம்பல் மூலம் செங்கல் தயாரிப்பது அனைவருக்கும் பயன்தரும். உங்கள் பிரச்னைகளை திராவிட மாடல் அரசு தீர்த்து வைக்கும்” என்றார்.

இதையடுத்து தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ”தமிழகத்தில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் உலர் சாம்பல் மூலம் தினமும் 16 கோடி செங்கல் உற்பத்தி செய்யப்படுவதாக கூறினீர்கள். மண்ணெடுக்காமல் செங்கல் செய்வதால் உங்களது செயல் பாராட்டு கூறியது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. உங்களுக்கு உதவிட அரசு தயாராக உள்ளது. உங்களது கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டிடங்கள் உலர் செங்கல் மூலம் கட்டப்படும் என உறுதி கூறுகிறேன். மற்ற கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்த்து வைக்கிறேன்” என்றார்.

கூட்டத்தில் சங்க செயலாளர் சிவகுமார் அமைச்சரிடம் அளித்த கோரிக்கை மனுவில், ”தமிழக அரசு 5 சதவீத இலவச உலர் சாம்பலை வடசென்னை அனல்மின் நிலையங்களில் வழங்கவேண்டும். 10 சதவீத உலர் சாம்பலை அனைத்து அனல் மின் நிலையங்களிலும் வழங்கவேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத அனல் மின் நிலையங்களில் அரசினால் நியமிக்கப்பட்ட மானிய விலையில் பகிர்ந்து அளிக்கவேண்டும். ஜிஎஸ்டி வரி உயர்வை குறைக்கவேண்டும். சிமென்ட் மற்றும் இதர பொருள் தயாரிப்பாளர்களுக்கு உலர் சாம்பல் முக்கிய மூலப்பொருளாக இல்லாத சூழ்நிலையில் அவர்களோடு நாங்களும் பங்கேற்க கூடிய பொது டெண்டர் முறையை ரத்து செய்யவேண்டும். அரசு துறை சார்ந்த அனைத்து கட்டுமான பணிகளிலும் உலர் சாம்பல் செங்கல்களை பயன்படுத்தவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். கூட்டத்தில், பில்டர் அசோசியன் இந்தியா தலைவர் ஆர்.ராதா கிருஷ்ணன், கிரீடா தலைவர் ஆர்.இளங்கோவன், முன்னாள் மாநில தலைவர் எம்.ரவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர் பிரச்னை தீர்க்கப்படும்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் உறுதி appeared first on Dinakaran.

Tags : Minister Tha.Mo. ,Anbarasan ,CHENNAI ,East Coast Road, Chennai ,Minister ,Tha.Mo. ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...