×

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை தனிப்படை போலீசார் கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் (47). மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாவார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் செந்தில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். செந்தில் மட்டும் கைது செய்யப்படாமல் இருந்தார். அதன் பின்னர் செந்தில் காணாமல் போனதாக அவரது மனைவி முருகலட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் மீதான விசாரணையில் தொய்வு ஏற்பட்டதாக கருதி தனது கணவர் செந்திலை கண்டுபிடித்து தருமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முருகலட்சுமி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு குறித்து மதுரை ஐஜி அஸ்ராகார்க் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து இந்த மனு தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், காணாமல் போன செந்தில் கடந்த 2021 ஜனவரியில் சென்னையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் பிரபல ரவுடி மதுரையைச் சேர்ந்த வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. கருண்காரட் தலைமையிலான தனிப்படை போலீசார் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர். பின்னர் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரிச்சியூர் செல்வம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கொலை வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. வரிச்சியூர் செல்வத்துக்கு ஜாமின் தர மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது. வரிச்சியூர் செல்வம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன; ஜாமின் தந்தால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என போலீஸ் தரப்பு தெரிவித்தது.

The post பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை appeared first on Dinakaran.

Tags : Madurai High Court ,Varichiyur Selvam ,Madurai ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...