×

டிட்டோஜேக் அறிவிப்பு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் திட்டமிட்டபடி 13ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: டிட்டோஜேக் மாநில அமைப்பின் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு வந்தது. இது குறித்து கடந்த மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியுடன் டிட்டோஜேக் அமைப்பினர் நேரடியாக பேசி விளக்கம் அளித்தனர். இருப்பினும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டு டிட்டோஜேக் அமைப்பினர் அக்டோபர் 13ம் தேதி மாபெரும் கோரிக்கை முழக்க போராட்டத்தை சென்னை டிபிஐ வளாகத்தில் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் கொண்ட கல்வி அதிகாரிகள், டிட்டோஜேக் மாநில அமைப்பின் உயர் மட்டக் குழு உறுப்பினர்கள், முத்துசாமி, வின்செண்ட் பால்ராஜ், மயில், இரா.தாஸ், சி.சேகர், முத்துராமசாமி, தியோடர் ராபின்சன், சண்முகநாதன், காமராஜ், ஜெகநாதன் ஆகியோர் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு டிட்டேஜேக் மாநில அமைப்பின் உயர்மட்டக் குழுவினர் கூறியதாவது: டிட்டோஜேக் அமைப்பின் சார்பில் 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 13ம் தேதி டிபிஐ வளாகத்தில் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தோம். அதன் பேரில் கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் ஆகியோருக்கு மனு கொடுத்திருந்தோம். அதன்அடிப்படையில் இன்று பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர். இந்த பேச்சுவார்த்தையின் போது சில கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவை ஏற்றுக் கொள்ளும் அறிவிப்புகளாக இல்லை. ஆகவே, பள்ளிக்கல்வி இயக்குநர் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்புகளாக வெளியிட வேண்டும். நாங்களும் வருகின்ற 16ம் தேதி முதல் எம்இஐஎஸ் பதிவுகளை கைவிட்டுவிடுவோம். எண்ணும் எழுத்து திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கருத்தாளர்களாக ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளோம். இது குறித்து உரிய அறிவிப்புகள் வராவிட்டால் திட்டமிட்டபடி 13ம் தேதி சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடக்கும். இந்த போராட்டத்தில் சுமார் 13 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர் என்றனர்.

The post டிட்டோஜேக் அறிவிப்பு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் திட்டமிட்டபடி 13ம் தேதி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Titojak ,CHENNAI ,Titojak State Organization ,Ditojak ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்