×

நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் ஊழியர் சிக்கினார்: 2வது நாளாக பார்சல்களில் சோதனை

நாகர்கோவில்: நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று 2 வது நாளாகவும் தபால் நிலையத்தில் சோதனை நடைபெற்றது. நாகர்கோவிலில் நாகராஜா கோயில் வடக்கு ரத வீதியில் மாவட்ட தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்குள்ள தலைமை அதிகாரிக்கு வந்த கடிதத்தில், தபால் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது 11ம் தேதி காலையில் வெடித்து சிதறும் என குறிப்பிட்டு இருந்தது.

இது குறித்து மாவட்ட தபால் துறை அலுவலர் சார்பில் எஸ்.பி.யிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வடசேரி போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் தலைமை தபால் நிலையத்துக்கு வந்து சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் தேடினர். பார்சல்களும் சோதனை செய்யப்பட்டன. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து மிரட்டல் கடிதம் எங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்தனர்.

இதில், வடிவீஸ்வரம் தபால் நிலையத்தில் இருந்த இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. எனவே இதை அனுப்பியவர் யாராக இருக்கும் என்பது குறித்து விசாரணை நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமை தபால் நிலைய ஊழியர் செல்வராஜன் (59) வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வடிவீஸ்வரம் தபால் நிலைய சாலையில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் கடிதத்தில் உள்ள எழுத்துக்களை ஏற்கனவே பார்த்ததாக தபால் நிலைய ஊழியர்கள் கூறினர். இதன் அடிப்படையில் தபால் நிலையத்தில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அப்போது தலைமை தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி நீக்கம் செய்யப்பட்ட தேரூரை சேர்ந்த முன்னாள் ஊழியர் ஒருவர் தான் இந்த கடிதத்தை எழுதியது தெரிய வந்தது.

பணி நீக்கம் செய்யப்பட்ட இவர், ஏற்கனவே தபால் நிலையம் குறித்து பல பொய்யான புகார்களை உயர் அதிகாரிகளுக்கு எழுதி அனுப்பி இருந்தார். அந்த புகார் மனுக்கள் தலைமை தபால் நிலையத்துக்கே வந்திருந்தன. அதில் உள்ள எழுத்துக்களை வைத்து தான், சம்பந்தப்பட்ட நபர் தான் மிரட்டல் கடிதத்தை அனுப்பியது உறுதியானது. இதையடுத்து இன்று காலை சம்பந்தப்பட்ட நபரை தனிப்படை போலீசார் மடக்கினர்.

தபால் நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்தவே அவர் இந்த கடிதத்தை அனுப்பியதாக கூறி உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இன்று காலை 2 வத நாளாக தபால் நிலைய பார்சல்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்ெகாண்டனர். காலையில் நிலையத்துக்கு வந்த அனைத்து பார்சல்களும் சோதனை செய்யப்பட்டது.

The post நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் ஊழியர் சிக்கினார்: 2வது நாளாக பார்சல்களில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Nagarkovel ,Nagarko ,Nagarkovil ,Dinakaraan ,
× RELATED நாகர்கோவில் மாநகரில் இன்று முதல் 30 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்