×

2வது நாளாக கடலில் சாகர் கவாச் ஒத்திகை கன்னியாகுமரியில் லாட்ஜூகளில் சோதனை: தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க அதிரடி


கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இன்று 2 வது நாளாக சாகர் கவாச் ஒத்திகை நடைபெற்றது. கடலில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் லாட்ஜூகளிலும் அதிரடி சோதனை மேற்ெகாண்டனர். நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் கடலோர பாதுகாப்புக்கான சாகர் கவாச் ஒத்திகை கடலோர மாவட்டங்களில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

குமரி மாவட்டத்திலும் கடலோர பகுதிகளில் சாகர் கவாச் ஒத்திகை நடந்தது. உவரி முதல் கன்னியாகுமரி வரை ஒரு பிரிவினரும், கன்னியாகுமரி முதல் நீரோடி வரை ஒரு பிரிவினரும் என 2 குழுக்களாக பிரிந்து கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார், இன்ஸ்பெக்டர் நவீன்குமார் தலைமையில் ரோந்து பணிகளை மேற்கொண்ட போலீசார், இந்த ஒத்திகையில் சோதனைக்காக படகில் வந்து கன்னியாகுமரிக்குள் தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற மப்டி போலீசார் 9 பேரை கண்டுபிடித்து மடக்கினர்.

இன்றும் 2 வது நாளாக சாகர் கவாச் ஒத்திகை காலை 6 மணிக்கு தொடங்கியது. கடலோர பகுதிகள் மட்டுமின்றி கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜூகளிலும் சோதனை மேற்கொண்டனர். சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. 2 வது நாளாக கடலில் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 72 கி.மீ. தூரம் கடலோர பகுதிகள் உள்ளன. இந்த பகுதி முழுவதும் கண்காணிக்கும் வகையில் ஒத்திகை நடந்து வருகிறது. இன்று மாலையுடன் ஒத்திகை நிறைவடைகிறது.

The post 2வது நாளாக கடலில் சாகர் கவாச் ஒத்திகை கன்னியாகுமரியில் லாட்ஜூகளில் சோதனை: தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க அதிரடி appeared first on Dinakaran.

Tags : Sagar Gavach ,Kanyakumari ,Sagar Kavach ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி