×

நிதி பகிர்வில் பாரபட்சம்!: ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது… பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

சென்னை: நிதி பகிர்வில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு பாரபட்சம் காட்டுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது, தமிழ்நாடு வசூலித்துக் கொடுக்கும் வரிக்கு ஈடாக ஒன்றிய அரசிடம் இருந்து வரிப் பங்கு கிடைப்பதில்லை என புகார் தெரிவித்தார். ஜிஎஸ்டி வரியால் தமிழகத்திற்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. உத்திரப்பிரதேசம், பீகாரில் 200% பேரிடர் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு 64% மட்டுமே பேரிடர் நிவாரண நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

உ.பி. உள்ளிட்ட வடமாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்வதாக கடுமையாக சாடினார். மேலும் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு 1.5 லட்சம் கொடுக்கிறது. மீதமுள்ள ரூ.7 லட்சத்தை தமிழக அரசு கொடுக்கிறது. ஆனால் பெயர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என உள்ளது என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசு வரியாக வசூலித்து ஒன்றிய அரசுக்கு வழங்கும் 1க்கு வரிப்பங்காக தமிழ்நாட்டுக்கு கிடைப்பது 29 காசுகள்தான். 2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ5.16 லட்சம் கோடி.

ஆனால், வரிப்பகிர்வாக நமக்கு கிடைத்தது ரூ2.08 லட்சம் கோடி மட்டுமே. அதே நேரத்தில் உ.பி. வழங்கும் ஒரு ரூபாய்க்கு ஈடாக அந்த மாநிலத்துக்கு ஒன்றிய அரசு ரூ.2.73 ஐ வரிப்பங்காக கொடுக்கிறது. அதாவது, உ.பி.,யின் பங்களிப்பு ரூ2.24 லட்சம் கோடி. ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டது ரூ9.04 லட்சம் கோடி. இப்படித்தான் நிதி பகிர்வில் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று சாடினார். பாஜக ஆளும் மாநிலங்களில் வரி பகிர்வு அதிகமாக உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

The post நிதி பகிர்வில் பாரபட்சம்!: ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது… பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union government ,Minister Thangam ,South ,Chennai ,Minister ,Thangam Thennarasu ,Tamil Nadu ,Minister Tangam ,Legislative Assembly ,Tangam ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...