×

இயந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்தால் மகசூல் அதிகரிக்கும்

*சாகுபடி செலவு குறையும்

திருமயம் : அரிமளம் அருகே இயந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்வதால் விவசாயத்தால் ஏற்படும் பண விரயத்தை குறைத்து மகசூல் அதிகப்படுத்தலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் காவிரி ஆற்று பாசனம் கொண்ட டெல்டா மாவட்டங்களாக கருதப்பட்டாலும் திருமயம், அரிமளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி கிராம விவசாயிகள் மழை நீரை நம்பியே விவசாயம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் ஆண்டு தோறும் விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அரிமளம், திருமயம் பகுதியில் பருவமழை காலம் கடந்து பெய்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பருவ நிலை மாற்றத்தால் விவசாயிகள் விவசாயம் செய்ய ஆர்வம் இல்லாததால் அரிமளம், திருமயம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் சீமை கருவேல மரம் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. ஒரு சில விவசாயிகள் மழையை எதிர்பாராமல் கிணறு பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களுக்கும் நிலத்தடி நீர் சவால் கொடுத்து வருவதால் வரும் காலங்களில் விவசாயிகள் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இதனிடையே அரிமளம் அருகே உள்ள தாஞ்சூர் வையாபுரிப்பட்டி புதுவயலில் விதை ரோலர் கருவியை (சீடு டிரில்லர் மெஷின்) கொண்டு ஒரு சில விவசாயிகள் நேரடி விதை நெல் விதைப்பு செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, விதை நெல் ரோலர் விதைப்பு கருவியை விதைப்பு செய்யும்போது நாற்றங்கால் நெல் விதைப்பு செய்வதை விட ஒரு ஏக்கருக்கு மூன்றில் ஒரு பங்கு விதை போதுமானது.

மேலும் கருவி கொண்டு விதைப்பு செய்வதால் நேர்த்தியான நெல் விதைப்பு இருப்பதோடு ஒவ்வொரு நாற்றுக்கும் உள்ள இடைவெளி சமமாக உள்ளது.
இதேபோல் கருவி விதைப்பில் நெல்லின் முளைப்புத்திறன் ஒரே மாதிரியாக இருப்பதோடு நாற்றுக்கான இடைவெளி சரியாக இருப்பதால் சூரிய ஒளி தரையில் படுவதன் மூலம் நாற்றின் கிளை உற்பத்தி தன்மை அதிகரிக்கிறது.

மேலும் பூச்சி மருந்து, உரம் உள்ளிட்ட இடுபொருட்களை விவசாயிகள் பயன்படுத்துவது எளிதாகிறது. இதனால் பூச்சிகள், எலிகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க முடிகிறது. இதைவிட முக்கியமானது பணியாட்கள் குறைவான அளவில் தேவைப்படுவதால் விவசாயத்தில் ஏற்படும் செலவு பெருமளவு குறைக்கப்படுகிறது.

இவ்வாறு விதைப்பு செய்வதன் மூலம் கோனோ வீடர் கருவியை கொண்டு எளிதில் களை எடுக்க முடிகிறது. எனவே நெல் விதைப்பு உருளை கருவியைக் கொண்டு விதை விதைப்பதன் மூலம் குறைந்த செலவில் அதிக மகசூலுடன் லாபம் பெறலாம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post இயந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்தால் மகசூல் அதிகரிக்கும் appeared first on Dinakaran.

Tags : Arimalam ,Dinakaran ,
× RELATED அரிமளம், திருமயம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலுக்கு கருகும் தைலமரங்கள்