×

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் 10 முறை சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் 10 முறை சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இருக்கை விவகாரத்தில் 10 முறை சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். இருக்கை விவகாரம் குறித்து பலமுறை கடிதம் குறித்தும் சபாநாயகர் தீர்வை அளிக்கவில்லை. நியாயமான கோரிக்கையை சபாநாயகரிடம் வைத்துள்ளோம்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் எதிர்க்கட்சி தலைவருக்கு அருகில்தான் அமரவைக்கப்பட வேண்டும். ஓ.பி.எஸ். உள்பட 3 பேரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்று நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது. 3 பேரை தகுதிநீக்கம் செய்யக் கோரி மனு அளித்துள்ளோம். 3 பேரும் எக்கட்சியையும் சாராதவர்கள் என்று அறிவிக்கக் கோரி கடிதம் கொடுத்துள்ளோம். நீதிமன்ற தீர்ப்பின் நகலை அளித்த பின்பும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காதது சரியல்ல. சபாநாயகரிடம் இருந்து முழுமையாக பதில் கிடைக்கவில்லை. சபாநாயகர் மரபை கடைபிடிக்க வேண்டும்.

புனிதமான இருக்கையில் உள்ள சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என பேரவைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கும் முன் சபாநாயகரே பதிலளிக்கிறார். மக்கள் பிரச்னைகளுக்கு அமைச்சர்கள் பதில் தரும் முன்பே சபாநாயகர் பேசிவிடுகிறார் என விமர்சித்தார். இருக்கை ஒதுக்கீடு குறித்த கோரிக்கைகளை ஏற்காதது ஏன்? என சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும். எங்கள் நியாயமான கோரிக்கை குறித்து பேரவையில் முழுமையாக பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி சாடினார்.

The post சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் 10 முறை சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Leader of the Legislative Assembly ,Edappadi Palaniswami ,Chennai ,Legislative Assembly ,
× RELATED காலி மது பாட்டில்களை உடனடியாக...